கொள்ளை அடிக்கப்பட்ட சிலைகள் குறித்து ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் விசாரிக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
ஜூலை 21–ந் தேதிக்கு முன்பு காணாமல் போன, கொள்ளையடிக்கப்பட்ட சாமி சிலைகள், அது தொடர்பான வழக்குகள் அனைத்தையும் சிறப்பு அதிகாரியான ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் விசாரிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய காதர்பாஷா உள்ளிட்ட சில போலீஸ்காரர்கள், பழங்கால சாமி சிலைகளை, சர்வதேச கடத்தல் கும்பலிடம் பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், ‘இந்த சிலை கடத்தல் சம்பவம் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் இதுபோல சாமி சிலைகள் கடத்தப்பட்டதாக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக, ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலை நியமித்து உத்தரவிட்டார்.
மேலும் அந்த உத்தரவில், சிறப்பு அதிகாரி ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமை அலுவலகம் திருச்சியில் அமைக்கப்பட வேண்டும். இந்த சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும், கும்பகோணம் தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு விசாரிக்கவேண்டும். இதற்காக இந்த கோர்ட்டை சிறப்பு கோர்ட்டாக அறிவிக்கிறேன்’ என்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் உத்தரவிட்டிருந்தார்.
இந்தநிலையில், இந்த உத்தரவில் சில சந்தேகங்கள் உள்ளதாகவும், அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘ஜூலை 21–ந் தேதி தாங்கள் பிறப்பித்த தீர்ப்புக்கு, முன்பு பதிவான வழக்குகளை மட்டும் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் விசாரிக்க வேண்டுமா?, அல்லது அந்த தீர்ப்புக்கு பின்னர் பதிவாகும் வழக்குகளையும் இவர்தான் விசாரிக்க வேண்டுமா?’ என்று கேட்டிருந்தனர்.
ஆனால், இந்த தீர்ப்பை பிறப்பித்த நீதிபதி ஆர்.மகாதேவன் தற்போது ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்குகளை விசாரித்து வருகிறார். இதையடுத்து அரசு தாக்கல் செய்துள்ள இந்த மனுவை ஐகோர்ட்டு மதுரை கிளையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் நேற்று மாலையில் நீதிபதி விசாரித்தார்.
அரசு தரப்பு வக்கீல்களின் வாதத்தை கேட்டறிந்த நீதிபதி, ‘ஜூலை 21–ந் தேதிக்கு முன்பு சிலைகள் காணாமல் போய் இருந்தாலோ, அல்லது சிலை காணாமல் போனது குறித்து அப்போது புகார் செய்யாமல், தற்போது புகார் செய்து, அதனடிப்படையில் புதிதாக வழக்குப்பதிவு செய்திருந்தாலோ, அந்த வழக்குகள் அனைத்தையும் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தான் விசாரிக்கவேண்டும். திருச்சியில் அவருக்கு தலைமை அலுவலகம் அமைத்து, அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்துகொடுக்கவேண்டும். இதற்கான அரசாணையை ஒரு வாரத்துக்குள் தமிழக அரசு பிறப்பிக்கவேண்டும். இந்த வழக்கு விசாரணையை வருகிற 10–ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்’ என்று உத்தரவிட்டார்.
அப்போது மனுதாரர் யானை ராஜேந்திரன், ‘தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில் சிலைகளையும் பதிவு செய்யவேண்டும் என்று தமிழக அரசு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து இருந்தும், அதிகாரிகள் யாரும் அதை அமல்படுத்தாமல் உள்ளனர். எனவே, கோவில் சிலைகளை எல்லாம் பதிவு செய்யவேண்டும். மேலும், அனைத்து கோவில்களையும், அங்குள்ள சிலைகள், சொத்துகள் ஆகியவற்றை பாதுகாக்க ஒரு உயர்மட்ட பாதுகாப்பு குழுவை அமைக்க வேண்டும் என்று புதிதாக ஒரு மனு தாக்கல் செய்துள்ளேன்’ என்றார்.
இந்த மனுவும் 10–ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.