சுப்ரீம் கோர்ட்டின் விசாரணை பட்டியலில் இருந்து சசிகலாவின் மறுஆய்வு மனு நீக்கம்
சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்ததை தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி அவர்கள் மூவர் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரோகின்டன் பாலி நாரிமன், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை, மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி, நீதிபதி அமிதவ ராய் பங்கேற்ற அமர்வில் ஆஜராகி, நீதிபதி ரோகின்டன் பாலி நாரிமனின் தந்தையார் பாலி நாரிமன் ஏற்கனவே சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோருக்காக ஆஜராகி இருப்பதால், அவர் இந்த மறுஆய்வு மனுவின் மீதான விசாரணையில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதனை தொடர்ந்து, நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறுவதாக இருந்த இந்த மறுஆய்வு மனுவின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டின் விசாரணை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இந்த மனுவை வேறு அமர்வு விசாரிக்கும் என்றும் பதிவாளர் அலுவலகம் அறிவித்து உள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டோருக்கு தண்டனை அறிவித்தது நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு ஆகும். இவர்களில் நீதிபதி பினாகி சந்திரகோஷ் ஏற்கனவே பதவி ஓய்வு பெற்றுவிட்டார்.
இந்த நிலையில் சசிகலாவின் மறு ஆய்வு மனுவை விசாரிக்கும் அமர்வில் வேறு எந்த நீதிபதி புதிதாக நியமிக்கப்பட்டாலும் அவர் இந்த வழக்கை புதிதாக விசாரிப்பது போலத்தான் இருக்கும். எனவே எந்த அமர்வை நியமித்தாலும் அந்த அமர்வு இந்த மறுஆய்வு மனுவை வழக்கப்படி நீதிபதிகள் அறையில் விசாரிக்காமல் திறந்த வெளி அமர்வில் விசாரிக்க வேண்டும் என்று சசிகலா உள்ளிட்டோர் தரப்பில் இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த இடைக்கால மனுவின் மீதும் விரைவில் விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.