மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில் இந்தியா வெற்றி: ‘டக்வொர்த்–லீவிஸ்’ விதிமுறை புரியவில்லை
ராஞ்சியில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 18.4 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 118 ரன்களுடன் ஊசலாடிக்கொண்டிருந்த போது, பலத்த மழை பெய்தது. 2 மணி நேரம் பாதிப்பு ஏற்பட்டதால் அத்துடன் ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸ் முடித்துக் கொள்ளப்பட்டு, ‘டக்வொர்த்–லீவிஸ்’ விதிமுறைப்படி இந்தியாவுக்கு 6 ஓவர்களில் 48 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. இந்த இலக்கை இந்திய அணி 5.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழந்து எட்டியது. கேப்டன் விராட் கோலி (22 ரன்), ஷிகர் தவான் (15 ரன்) களத்தில் இருந்தனர்.
சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணியின் 50–வது வெற்றி (84 ஆட்டம்) இதுவாகும். 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகள் பெற்ற அணிகளின் வரிசையில் பாகிஸ்தான் (69 வெற்றி), தென்ஆப்பிரிக்கா (57), இலங்கை (51) ஆகிய அணிகளுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது.
வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘டக்வொர்த்–லீவிஸ் விதிமுறையை உண்மையிலேயே எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆஸ்திரேலியாவை 118 ரன்களுக்கு கட்டுப்படுத்திய நிலையில் 40 ரன்கள் அளவிலேயே இலக்காக நிர்ணயிக்கப்படும் என்று நினைத்தோம். ஆனால் இது போன்ற சூழலில் 6 ஓவர்களில் 48 ரன்கள் இலக்கு என்பது கடினமானதே. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.’ என்றார்.
கோலி மேலும் கூறுகையில், ‘டாஸ் ஜெயித்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த போது, பவுலர்களிடம் இருந்து இத்தகைய ஒரு முயற்சி தான் தேவையாக இருந்தது. அந்த பணியை கச்சிதமாக செய்தனர். புவனேஷ்வர்குமார் தொடக்கத்திலேயே ஆஸ்திரேலியாவின் விக்கெட்டை வீழ்த்தி நல்ல தொடக்கம் தந்தார். இறுதி கட்ட ஓவர்களில் ஜஸ்பிரித் பும்ரா கலக்கினார். மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் பார்த்துக் கொண்டனர். தற்போது இந்திய பவுலர்களின் செயல்பாடு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது அனைவரின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்’ என்றார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) புதிய விதிமுறை கடந்த 28–ந்தேதி அறிமுகம் ஆனது. இந்த போட்டி புதிய விதிமுறைகளுக்குட்பட்டே நடந்தது. டெஸ்ட், ஒரு நாள் போட்டிகள் போன்றே 20 ஓவர் போட்டியிலும் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும். ஒவ்வொரு இன்னிங்சிலும் தலா ஒரு முறை டி.ஆர்.எஸ். விதியை பயன்படுத்தலாம்.
இதே போல் மழையால் ஆட்டம் 10 ஓவர்களுக்கு கீழாக குறைக்கப்படும் போது, ஒவ்வொரு பவுலரும் குறைந்த பட்சம் 2 ஓவர்கள் பந்து வீசலாம். இதன்படி ஆஸ்திரேலிய அணியில் மூன்று பவுலர்கள் தலா 2 ஓவர்களை வீசியிருக்க முடியும். ஆனால் நாதன் கவுல்டர்–நிலே மட்டுமே இரண்டு ஓவர்களை வீசினார். புதிய விதிமுறை குறித்து சரிவர தெரியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் குழம்பி போய் விட்டனர்.
இந்த ஆட்டத்தில் அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்ச் கூறுகையில், ‘5 ஓவர்கள் வரை டி.ஆர்.எஸ். வாய்ப்பை பயன்படுத்தலாம் என்பது தெரியாது. ஸ்டீவன் சுமித் களத்திற்கு குளிர்பானம் கொண்டு வந்த போது தான் அது பற்றி எங்களிடம் சொன்னார். இதனால் நாங்கள் நடுவர்களிடம் கேட்க வேண்டியதாகி விட்டது. ஒரு நாள் தொடர் பழைய விதிமுறைக்குட்பட்டே நடந்தது. அப்படி இருக்கும் போது நடப்பு தொடரிலேயே இதை கொண்டு வந்தது வினோதமாக இருக்கிறது. அதனால் தேவையில்லாத குழப்பம் ஏற்பட்டு விட்டது.’ என்றார்.
மேலும் ஆரோன் பிஞ்ச் கூறுகையில், ‘இந்த ஆடுகளத்தில் 150 ரன்கள் சவாலான ஸ்கோராக இருக்கும். 150 ரன்களுக்கு மேலோ அல்லது அந்த அளவுக்கோ ரன்கள் எடுக்க வேண்டும் என்று விரும்பினோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக விக்கெட்டுகளை மளமளவென இழந்து விட்டோம்’ என்றார்.
இவ்விரு அணிகள் இடையிலான 2–வது 20 ஓவர் போட்டி கவுகாத்தியில் நாளை நடக்கிறது.