2-வது டி 20 ஆட்டத்தில் பதிலடி கொடுத்தது ஆஸ்திரேலியா
இந்தியாவுக்கு எதிரான 2-வது டி 20 ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
குவாஹாட்டியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பீல்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் டேன் கிறிஸ்டியன் நீக்கப்பட்டு மார்க்கஸ் ஸ்டாயினிஸ் சேர்க்கப்பட்டார். இந்திய அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இதையடுத்து இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது. பெஹ்ரென்டார்ப் வீசிய முதல் ஓவரில் இரு பவுண்டரிகள் விரட்டிய ரோஹித் சர்மா (8) 4-வது பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.
இதையடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி 2 பந்துகளை சந்தித்த நிலையில் ரன் ஏதும் எடுக்காத நிலையில் இதே ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். மிடில் ஸ்டெம்பை நோக்கி வீசப்பட்ட பந்தை கோலி பிளிக் செய்ய முயன்ற போது, அது பெஹ்ரென்டார்பிடமே கேட்ச்சாக மாறியது. சர்வதேச டி 20 போட்டிகளில் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தது இதுவே முதன்முறை.
8 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்த நிலையில் ஷிகர் தவணுடன், மணீஷ் பாண்டே இணைந்தார். 7 பந்துகளை சந்தித்த மணீஷ் பாண்டே 6 ரன்கள் எடுத்த நிலையில் பெஹ்ரென்டார்ப் பந்தில் விக்கெட் கீப்பர் டிம் பெயினிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். விக்கெட்கள் சரிந்த நிலையில் பொறுமையை கடைபிடிக்காத ஷிகர் தவண் (2), லாவகமாக வீசப்பட்ட பந்தை தூக்கி அடிக்க அது வார்னரிடம் கேட்ச் ஆனது. பவர்பிளேவில் இந்திய அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 38 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து களமிறங்கிய தோனி, ஆடம் ஸம்பா பந்தை தவறாக கணித்து கிரீஸூக்கு வெளியே வந்து விளையாட முயன்று ஸ்டெம்பிங் ஆனார். தோனி 16 பந்துகளில் 13ரன்கள் சேர்த்தார். சிறிது நேரம் தாக்குப்பிடித்து விளையாடிய கேதார் ஜாதவ் 27 பந்துகளில் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 27 ரன்கள் எடுத்த நிலையில் ஆடம் ஸம்பா பந்தில் போல்டானார். 67 ரன்களுக்கு 6 விக்கெட்களை பறிகொடுத்த நிலையில் ஹர்திக் பாண்டியாவுடன் புவனேஷ்வர் குமார் இணைந்தார்.
அடுத்த 3 ரன்களை சேர்ப்பதற்குள் இந்திய அணி மேலும் ஒரு விக்கெட்டை இழந்தது. நாதன் கோல்டர் வீசிய பந்தை தெர்டுமேன் திசையில் தூக்கி அடித்து புவனேஷ்வர் குமார் (1) ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் பாண்டியா 23, குல்தீப் யாதவ் 16, ஜஸ்பிரித் பும்ரா 7 ரன்கள் சேர்த்து நடையை கட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 118 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணித் தரப்பில் பெஹ்ரென்டார்ப் 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.
இதையடுத்து 119 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 15.3 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹென்ட்ரிக்ஸ் 46 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 62 ரன்களும், டிரெவிஸ் ஹெட் 34 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 48 ரன்களும் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
டேவிட் வார்னர் 2, ஆரோன் பின்ச் 8 ரன்கள் சேர்த்தனர். 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரை 1-1 என சமநிலையை அடையச் செய்துள்ளது. கடைசி ஆட்டம் வரும் 13-ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.