அரசியல்வாதிகள் மீதான குற்ற வழக்குகளில் ஓராண்டுக்குள் விசாரணை நடத்தி முடிப்பதை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்
குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் நிரந்தரமாக தேர்தலில் போட்டியிட தடை விதிக்ககோரி சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் அஸ்வினிகுமார் பொதுநல மனு தாக்கல் செய்து உள்ளார். அதில் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு குறைந்த பட்ச கல்வித் தகுதியை நிர்ணயிக்கவேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
இதற்கு எதிராகவும் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இந்த மனுக்கள் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:–
தற்போது குற்றவழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் எத்தனை சதவீதம் என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறோம். இது நிச்சயமாக புதிய பரிமாணத்தை உருவாக்கும்.
அரசியல்வாதிகளின் மீதான குற்ற வழக்குகள் குறித்து நாங்கள் ஆய்வு செய்வோம். இந்த வழக்குகளில் தண்டனை அளிக்கும் நிலை எட்டப்படாமல் இருந்தால் அது ஏன்? எதற்காக தண்டனை வழங்கப்படாமல் உள்ளது? வழக்கு விசாரணை எதனால் தாமதமாகிறது என்பதற்கான காரணங்களையும் கோர்ட்டு ஆய்வு செய்யும்.
அரசியல்வாதிகள் மீதான குற்ற வழக்குகளை ஓராண்டுக்குள் முடிக்கவேண்டும் என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது. எனவே இதை தீவிரமாக செயல்படுத்தவேண்டும். மேலும் அரசியல்வாதிகள் மீதான குற்ற வழக்குகளில் இதுவரை அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை பற்றி தகவல்களை கோர்ட்டுக்கு மத்திய அரசு அளிக்கவேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
இந்த வழக்கில் இன்றும்(புதன்கிழமை) விசாரணை நடைபெறுகிறது.
தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் தேர்தலில் நிரந்தமாக போட்டியிட தடைவிதிக்கவேண்டும் என்ற மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருப்பது, குறிப்பிடத்தக்கது.