தினகரன் அணியின் 3 எம்.பி.க்களை தகுதிநீக்கம் செய்ய முடியுமா?
அ.தி.மு.க. ஒன்றிணைந்த அணிகள் சார்பில் டாக்டர் மைத்ரேயன் எம்.பி., முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி மற்றும் மனோஜ்பாண்டியன் ஆகியோர் நேற்று மாலை 3 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் மேல்–சபை பொதுச்செயலாளர் தீபக் வர்மாவை சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடைபெற்றது.
அப்போது அவர்கள் டி.டி.வி.தினகரன் அணியைச் சேர்ந்த மேல்–சபை எம்.பி.க்கள் நவநீதகிருஷ்ணன், விஜிலா சத்தியானந்த், புதுச்சேரி கோகுலகிருஷ்ணன் ஆகிய 3 பேரையும் தகுதிநீக்கம் செய்ய வாய்ப்பு இருக்கிறதா? என்பது பற்றி ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் கமிஷனில் விசாரணை நடைபெற்றபோது, தான் எந்த அணியையும் சேராதவன் என்று நவநீதகிருஷ்ணன் எம்.பி. சொன்னதாக தெரிகிறது. இதை சுட்டிக்காட்டிய டாக்டர் மைத்ரேயன் குழுவினர், நவநீதகிருஷ்ணனின் மேல்–சபை அ.தி.மு.க. தலைவர் பதவியையும், அவரோடு சேர்ந்த மேல்–சபை அ.தி.மு.க. கொறடா விஜிலா சத்தியானந்தையும் அந்த பதவிகளில் இருந்து நீக்க வாய்ப்பு இருக்கிறதா? என்றும் கருத்து கேட்டனர்.
மேலும் இந்த 3 எம்.பி.க்களையும் கட்சித்தாவல் தடை சட்டத்தின்படி தகுதிநீக்கம் செய்ய முடியுமா? என்பது பற்றியும் ஆலோசனை நடத்தினர்.
இதை டாக்டர் மைத்ரேயன் எம்.பி. செய்தியாளர்களிடம் உறுதி செய்தார்.