நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம்: திலீப்புக்கு ஆதரவாக மாறும் சாட்சிகள் போலீசார் திணறல்
கேரளாவில் பிரபல மலையாள நடிகை கடத்தப்பட்டு காரில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். இந்த வழக்கில், மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டார். தற்போது ஜாமீன் பெற்று வெளியில் உள்ளார்.
திலீப் மீதான இந்த வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தயாராகி வருகின்றனர். இந்நிலையில், திலீப்புக்கு எதிரான சாட்சிகள் திடீர் பல்டி அடித்து வருவதால் போலீசார் திணறுகின்றனர்.
நடிகையைக் காரில் கடத்திய வழக்கில் தலைமறைவாக இருந்தார் முக்கியக் குற்றவாளியான பல்சன் சுனில். அதன் பின்னர் அவர், திலீப்பின் மனைவி காவ்யா மாதவன் நடத்தும் ஜவுளிக்கடை லக்ஷ்யாவுக்கு அடிக்கடி வந்ததாக, அந்தக் கடையில் பணியில் இருந்த ஒருவர் போலீஸாரிடம் கூறியிருந்தார். இதன் பின்னர், காவியாவின் கார் ஓட்டுநர் ஒருவர், இந்த வாக்குமூலத்தை மாற்றிக்கொள்ளுமாறு தன்னிடம் 41 முறை தொடர்பு கொண்டு பேசியதாகவும் போலீஸாரிடம் கூறியிருந்தார்.
ஆனால், திடீரென்று அந்த சாட்சி, நீதிமன்ற ரகசிய வாக்குமூலத்தில், தனக்கு பல்சர் சுனில் யாரென்றே தெரியாது என்றும், பல்சர் சுனில் அந்தக் கடைக்கு வந்ததாக தனக்கு நினைவில்லை என்றும், தனக்கு அவ்வாறு 41 போன் அழைப்புகள் எல்லாம் வரவில்லை என்றும் பல்டி அடித்துள்ளார்.
போலீசார் இது குறித்து விசாரித்த போது, சாட்சி தனது போனின் அலைபேசிக்குதான் காவ்யா மாதவனின் டிரைவரிடம் இருந்து 41 போன் கால் அழைப்புகள் வந்ததாகக் கூறினாராம். முக்கிய சாட்சியாக போலீஸார் கருதியிருந்த இந்தப் பணியாளரின் பல்டியால் திலீப் மீதான போலீசாரின் பிடி தளர்ந்து கொண்டு வருவதாகவே கருதப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், பிற சாட்சிக்கு எதிராக தனியாக வழக்கு தொடரலாமா என்று ஆலோசித்து வருகின்றனராம். காரணம், முதலில் சாட்சி அளித்த தகவல்களை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து வைத்து இந்த வழக்கை நகர்த்தினர். இப்போது திடீரென சாட்சி அடித்துள்ள பல்டியால், போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.