வெவ்வேறு கதாநாயகனை வைத்து “2 மொழிகளில் படம் எடுப்பது, சிரமம்” -டைரக்டர் சுசீந்திரன்
சுசீந்திரன் டைரக்ஷனில் உருவாகியுள்ள புதிய படம், ‘நெஞ்சில் துணிவிருந்தால்.’ இந்த படத்தில், விக்ராந்த்-சந்தீப் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். படத்தின் ‘டிரைலர்’ வெளியீட்டு விழாவில், டைரக்டர் சுசீந்திரன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
“நான் மகான் அல்ல படம் எப்படி வெற்றி படமாக அமைந்ததோ அதைப்போலவே இந்த படத்திலும் அனைத்து பாடல்களும் ‘ஹிட்’ ஆகியுள்ளன. இமானுடன் நான் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். சந்தீப் சிறப்பாக நடித்து இருக்கிறார். அவருடன் நான், ‘ஜீவா’ படத்திலேயே இணைந்திருக்க வேண்டும்.
‘ஜீவா’ படத்தை முதலில் தமிழ் மற்றும் தெலுங்கில் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். தமிழில் விஷ்ணு விஷாலையும், தெலுங்கில் சந்தீப்பையும் வைத்து எடுக்க முடிவு செய்து, ஆரம்ப வேலைகளை தொடங்கினேன்.
2 நாட்கள் படப்பிடிப்புக்கு பிறகுதான் இரண்டு மொழிகளிலும் வெவ்வேறு கதாநாயகர்களை வைத்து படம் எடுப்பது கடினம் என்பது எனக்கு தெரிந்தது. சில காலத்துக்கு பிறகு பி மற்றும் சி சென்டர் நாயகனாக சந்தீப் வருவார். ஒரு நடிகர் வசனத்தை சரியாக பேசி விடலாம். ஆனால், அவர் நடிப்பின் மூலமாக அனைவரையும் உட்கார வைக்கிறார். சந்தீப் என்ற சிறந்த நடிகனை இந்த படத்தில் நான் பார்த்தேன். அவருடைய நடிப்புக்கு நல்ல பெயர் கிடைக்கும்.”