நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி
இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த நியூசிலாந்து அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதலாவது 20 ஓவர் போட்டி டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நேற்றிரவு நடந்தது.
‘டாஸ்’ ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் முதலில் இந்தியாவை பேட் செய்ய பணித்தார். இதன்படி இந்தியாவின் இன்னிங்சை ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் தொடங்கினர். தவான் 8 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்ச்சை சான்ட்னெரும், ரோகித் சர்மா 16 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த போது வழங்கிய கேட்ச்சை டிம் சவுதியும் கோட்டை விட்டனர்.
அணியின் ஸ்கோர் 158 ரன்களாக (16.2 ஓவர்) உயர்ந்த போது, ஷிகர் தவான் 80 ரன்களில் (52 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டம் இழந்தார். தவான் வெளியேற்றத்திற்கு பிறகு முன்வரிசையில் இறக்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யா (0) ஏமாற்றம் அளித்தார்.
இதைத் தொடர்ந்து நுழைந்த கேப்டன் விராட் கோலி, துரிதமான ரன்சேகரிப்பில் கவனம் செலுத்தினார். மறுமுனையில் தனது பங்குக்கு 80 ரன்கள் (55 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்) சேர்த்த ரோகித் சர்மா 19-வது ஓவரில் விக்கெட் கீப்பர் டாம் லாதமிடம் கேட்ச் ஆனார்.
கடைசி ஓவரில் டோனியும், கோலியும் தலா ஒரு சிக்சரை தூக்கியடித்து அணி 200 ரன்களை கடக்க வித்திட்டனர். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. கோலி 26 ரன்களுடனும் (11 பந்து, 3 சிக்சர்), டோனி 7 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நியூசிலாந்துக்கு எதிராக இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
பின்னர் கடின இலக்கை நோக்கி களம் கண்ட நியூசிலாந்துக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. யுஸ்வேந்திர சாஹலின் சுழலில் மார்ட்டின் கப்தில் (4 ரன்) வழங்கிய கேட்ச்சை, ஹர்திக் பாண்ட்யா பாய்ந்து விழுந்து பிரமாதமாக பிடித்து ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளினார். ஆனால் அடுத்த ஓவரில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் காலின் முன்ரோ கொடுத்த எளிதான கேட்ச்சை பாண்ட்யா நழுவ விட்டார். என்றாலும் முன்ரோ (7 ரன்) குடைச்சல் கொடுக்கவில்லை.
கேப்டன் வில்லியம்சனும் (28 ரன்) நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. சுழற்பந்து வீச்சாளர்கள் யுஸ்வேந்திர சாஹலும், அக்ஷர் பட்டேலும் கொடுத்த நெருக்கடியில் மிரண்டு போன நியூசிலாந்து அணியால் அதில் இருந்து மீளவே முடியவில்லை. அபாயகரமான பேட்ஸ்மேன் டாம் லாதம் 39 ரன்னில் (36 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஸ்டம்பிங் செய்யப்பட்டார். இதன் பிறகு மிட்செல் சான்ட்னெர் (27 ரன், 2 பவுண்டரி, 2 சிக்சர்) தவிர வேறு யாரும் சோபிக்கவில்லை.
20 ஓவர்கள் முழுமையாக ஆடிய நியூசிலாந்து அணியால் 8 விக்கெட்டுக்கு 149 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் இந்திய அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்தது. இந்திய வீரர் ஷிகர் தவான் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது 20 ஓவர் போட்டி ராஜ்கோட்டில் வருகிற 4-ந்தேதி நடக்கிறது.
வெற்றியுடன் விடைபெற்றார், நெஹரா
இந்திய வேகப்பந்து வீச்சாளர் 38 வயதான ஆஷிஷ் நெஹரா சொந்த ஊர் ரசிகர்கள், உறவினர்களின் முன்னிலையில் வெற்றியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நேற்று ஓய்வு பெற்றார். நேற்றைய ஆட்டத்தில் முதலாவது ஓவரையும், கடைசி ஓவரையும் வீசும் கவுரவத்தை பெற்ற நெஹராவுக்கு ஒரு விக்கெட்டும் கிடைக்கவில்லை. அவரது பந்து வீச்சில் காலின் முன்ரோ கொடுத்த கேட்ச் வாய்ப்பை பாண்ட்யா வீணடித்து விட்டார். அவர் பந்து வீச வந்த போதெல்லாம் ரசிகர்கள் பதாகைகளை காட்டியும், கரகோஷம் எழுப்பியும் ஊக்கப்படுத்தினர். ஆட்டம் முடிந்ததும் மைதானத்தை வலம் வந்த நெஹராவை, சக வீரர்களும், சக மாநில வீரர்களுமான (டெல்லி) விராட் கோலியும், ஷிகர் தவானும் சிறிது நேரம் தோளில் தூக்கி சுமந்தனர். அதன் பிறகு அனைவரும் உற்சாகமாக குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.
1999-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் கால்பதித்த நெஹரா இதுவரை 27 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி 34 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இது தவிர 17 டெஸ்ட், 120 ஒரு நாள் போட்டிகளிலும் பங்கேற்று இருக்கிறார். முன்னதாக அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் நினைவுப்பரிசை கோலியும், டோனியும் வழங்கினர். டெல்லி கோட்லா மைதானத்தில் பந்து வீசும் பகுதியில் ஒரு முனைக்கு நெஹராவின் பெயரை சூட்டி டெல்லி கிரிக்கெட் சங்கம் அவரை கவுரவப்படுத்தியுள்ளது.