ஆசிய கோப்பை பெண்கள் ஆக்கி இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி
ஆசிய கோப்பை பெண்கள் ஆக்கி போட்டியில் கால்இறுதியில் இந்திய அணி 7–1 என்ற கோல் கணக்கில் கஜகஸ்தானை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறியது.
ஆசிய கோப்பை ஆக்கி
ஆசிய கோப்பை பெண்கள் ஆக்கி போட்டி ஜப்பானில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, கஜகஸ்தானை எதிர்கொண்டது.
ஆட்டம் தொடங்கிய 2–வது நிமிடத்திலேயே கஜகஸ்தான் அணி முதல் கோல் அடித்தது. அந்த அணி வீராங்கனை வேரா டோமாஷ்னேவா இந்த கோலை அடித்தார். அதன் பிறகு ஆட்டம் முழுவதும் இந்திய அணியே ஆதிக்கம் செலுத்தியது. முடிவில் இந்திய அணி 7–1 என்ற கோல் கணக்கில் கஜகஸ்தானை விரட்டியடித்து அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.
சீனா அணி வெற்றி
இந்திய அணியில் குர்ஜித் கவுர் 4–வது, 42–வது, 56–வது நிமிடத்திலும், நவ்னீத் கவுர் 22–வது மற்றும் 27–வது நிமிடத்திலும், தீப் கிரேஸ் எக்கா 16–வது மற்றும் 41–வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் சீனா அணி 10–0 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை தோற்கடித்தது. இன்னொரு கால்இறுதி ஆட்டத்தில் தென்கொரியா அணி 9–0 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூரை ஊதி தள்ளியது.
அரைஇறுதியில் இந்தியா–ஜப்பான்
மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் ஜப்பான் அணி 2–0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை சாய்த்தது.
இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் அரைஇறுதி ஆட்டங்களில் சீனா–தென்கொரியா, இந்தியா–ஜப்பான் அணிகள் மோதுகின்றன.