டி.டி.வி.தினகரன் மீது இன்னும் ஏன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை?
இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் உள்ளிட்டோர் மீது இன்னும் ஏன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை? என்பது குறித்த அறிக்கையை 9–ந் தேதி டெல்லி போலீசார் தாக்கல் செய்ய வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் அ.தி.மு.க. (அம்மா) அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜூனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், ஹவாலா ஏஜெண்டுகள் நரேஷ், லலித்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பின்னர் தினகரன், மல்லிகார்ஜூனா, நரேஷ், லலித்குமார் ஆகியோர் ஜாமீனில் விடுதலை ஆனார்கள். சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாமீன் வழங்க தனிக்கோர்ட்டு மறுத்து விட்டது.
இந்த வழக்கில் ஜூலை 14–ந் தேதி கோர்ட்டில் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. முதல் குற்றவாளியான சுகேஷ் சந்திரசேகர் மீதான குற்றப்பத்திரிகை மட்டும் அப்போது தாக்கல் செய்யப்பட்டது. டி.டி.வி.தினகரன், மல்லிகார்ஜூனா உள்ளிட்ட மற்றவர்கள் குறித்து விசாரணை தொடர்ந்து வருகின்றன என்றும் இவர்கள் மீதான குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்றும் டெல்லி போலீஸ் கூறியது. ஆனால் இதுவரை 2–வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.
இந்நிலையில் டெல்லி போலீசார் நேற்று சுகேஷ் சந்திரசேகரை நீதிமன்ற காவல் நீட்டிப்புக்காக கோர்ட்டில் நீதிபதி பூனம் சவுத்ரி முன்பு ஆஜர்படுத்தினார்கள். அப்போது நீதிபதி, அரசு வக்கீலிடம் டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் மீது ஏன் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு அரசு வக்கீல் டெல்லி போலீஸ் அதிகாரிகள் யாரும் கோர்ட்டில் ஆஜராகவில்லை என்றும், அவர்களிடம் இதுகுறித்து விசாரித்து கோர்ட்டுக்கு தெரிவிப்பதாகவும் கூறினார். இதற்கு நீதிபதி, டெல்லி போலீசாரை இன்றைக்கு குற்றப்பத்திரிகை தொடர்பாக நிலைத்தகவல் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கூறப்பட்டது. அப்படியிருக்க அவர்கள் ஏன் வரவில்லை? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு அரசு வக்கீல், தனக்கும் இதுகுறித்து எந்த தகவலும் இல்லை என்றார். இதற்கு நீதிபதி, அப்படியென்றால் இந்த வழக்கின் விசாரணை அதிகாரி 9–ந் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும். இதுவரை தினகரன் உள்ளிட்டோர் மீது ஏன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்பது தொடர்பாக விரிவான அறிக்கையை அன்று போலீசார் தாக்கல் செய்ய வேண்டும்.