Breaking News
நீங்களும் முதலாளி ஆகலாம்!

அரசுப் பணிகளுக்காகவும் ஐ.டி. கம்பெனி பணிகளுக்காகவும் பலர் தயாராகிக் கொண்டிருந்தாலும் சொந்தத் தொழில் தொடங்க நினைப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு சுயதொழில் மற்றும் வேலைவாய்ப்பு பெற என்னென்ன பயிற்சிகள், வழிகாட்டல்கள் வழங்கப்படுகின்றது MSME Micro, Small & Medium Enterprises என்ற மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி நிலையம்.

தமிழகத்தில் சென்னையில் அமைந்துள்ள இந்நிறுவனம் ஏற்கெனவே தொழில் தொடங்கி நடத்தி வருபவர்களுக்கும், புதிதாகத் தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்களுக்கும் தொழில்நுட்ப பொருளாதார மேலாண்மை ஆலோசனைகளும், பயிற்சிகளும் வழங்கிவருகிறது. எம்.எஸ்.எம்.இ.டி.ஐ-யின் முழு செயல்பாடுகளையும் பற்றி விவரிக்கிறார் துணை இயக்குநர் ஜெயச்சந்திரன்.

“நாமும் ஒரு தொழிலைத் தொடங்கி நடத்த வேண்டும் என்று நினைக்கும் பலரும் செயல்பாட்டில் இறங்காமல் அந்த நினைவு களுடனேயே நின்றுவிடுவார்கள். இப்படிப்பட்ட ஆர்வமுள்ளவர்களுக்கு அவர்களின் தயக்கத்தைப் போக்கி சரியான தொழில் ஆலோசனைகள் தந்து அதற்குரிய தொழிற்பயிற்சிகளையும் வழங்கிவருவதுதான் எம்.எஸ்.எம்.இ.-டி.ஐ (MSME DI – Micro Small and medium Enterprises Development institute) நிறுவனத்தின் பணி.

இதில், ஒருநாள் ஊக்குவிப்பு முகாம் நிகழ்ச்சி ஒன்று நடத்துகிறோம். படித்துவிட்டு வேலையில்லாமல் இருப்பவர்களை அழைத்து தொழில் தொடங்க என்னென்ன வழிகள் இருக்கின்றன என்று சொல்வதற்கான நிகழ்ச்சிதான் இது. இதுபோன்று வருடத்திற்கு 28 நிகழ்ச்சிகள் நடத்தப்படும். சென்னையில் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பக்கத்து மாநிலமான புதுச்சேரியும் இதில் அடக்கம். இந்த நிகழ்ச்சிகளை ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் ஒவ்வொரு தேதியில் நடத்த பிரித்துக் கொடுத்துவிடுவோம்.

இந்த முகாமிற்கு வருபவர்களில் தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களை ஒரு குழுவுக்கு 25 பேர் என அமைத்து அவர்களுக்கு 6 வார பயிற்சி கொடுக்கப்படும். இந்தப் பயிற்சியில் 4 வாரம் தொழிலில் இருக்கக்கூடிய நுணுக்கங்களும், கடைசி 2 வாரத்தில் தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகள், வங்கியில் கடனுக்கு எப்படி விண்ணப்பிக்கலாம், அரசு திட்டங்கள் என்னென்ன இருக்கின்றன என்பதையெல்லாம் விளக்கிக் கூறி தயார் செய்துவிடுவோம்.

இந்தப் பயிற்சி வகுப்புகள் மற்றும் கருத்தரங்குள் அரசு நிதி உதவியுடன் நடத்தக்கூடிய நிகழ்ச்சி என்பதால் கட்டணம் கிடையாது. அப்படியே கட்டணம் இருந்தாலும் ஒருசில பயிற்சிகளுக்கு மட்டும் 6 வாரப் பயிற்சிக்கே குறைந்த கட்டணமாக ரூ.100 முதல் ரூ.200 வரை வாங்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு வகையினருக்கும் தனித்தனியான பயிற்சிகள் உள்ளன. உதாரணமாக ஜவ்வாது மலை, கல்வராயன் மலை, குன்னூர் பகுதிகளில் மலைவாழ் மக்கள் உள்ளனர். அவர்களுக்கான பிரத்யேகப் பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.

இந்தப் பயிற்சி வகுப்புகள் எப்போது நடத்தப்படுகிறது என்பதைச் செய்தித்தாள் வாயிலாகத் தெரிந்துகொள்ளலாம். அல்லது எங்கள் இணையதளமான www.msmedi-chennai.gov.in வழியாகவும் தெரிந்துகொள்ளலாம்” என்கிறார் ஜெயச்சந்திரன். மேலும் அவர், “அடுத்து ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் சிறந்ததாகச் செயல்படுகிறது என்றால், அவர்களுடன் சேர்ந்து இந்தப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். இந்தப் பயிற்சிகள் அனைத்துமே புதிய தொழில்முனைவோருக்கானது.

ஏற்கனவே தொழில் தொடங்கி நடத்திக்கொண்டிருப்பவர்களுக்கும் சில மார்க்கெட்டிங் உதவிக்காக வெண்டார் டெவலப்மென்ட் புரோக்ராம் என்ற 26 நிகழ்ச்சி இந்த ஆண்டு நடத்தப்பட உள்ளது. இதில் 6 நிகழ்ச்சிகள் தேசிய அளவிலும், மீதி 20 பயிற்சி வகுப்புகள் மாநில அளவிலும் நடத்தப்படுகிறது. இந்தப் பயிற்சி வகுப்புகள் எதற்கு என்றால், ஒரு பொருளை உற்பத்தி செய்துகொண்டிருப்பவர் அந்தப் பொருள் ஒரு பெரிய கம்பெனிக்கு… உதாரணமாக, ரயில்வே சில பொருட்களை அறிமுகம் செய்யும், அதனைச் சிறு கம்பெனிக்காரர்களால் தயார் செய்து கொடுக்க முடியுமா எனக் கேட்கும்போது இரண்டுபேரையும் அழைத்து பெரிய கம்பெனிக்காரர்களிடம் உங்களுக்கு என்ன தேவை என்றும், சிறு கம்பெனிக்காரர்களிடம் அதை அவர்கள் தயார் செய்து கொடுக்க  ஒரு வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவே இந்த வெண்டார் புரோக்ராம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இந்தப் பயிற்சி வகுப்புகள் மாநில அளவில் ஒருநாளும், தேசிய அளவில் இரண்டு மூன்று நாட்களும் நடத்தப்படும். அத்துடன் கண்காட்சி மற்றும் கருத்தரங்குகளும் நடத்தப்படும். இதில் சிறு கம்பெனிகள் ஸ்டால் போடும், பெரிய கம்பெனிக்காரர்கள் அவர்களுக்கு என்னென்ன தேவையோ அதையெல்லாம் அங்கு காட்சிப்படுத்துவார்கள். இது சிறு கம்பெனிக்கும் பெரிய கம்பெனிக்கும் ஒரு பாலத்தை உருவாக்கும் முயற்சி” என்றார்.

எம்.எஸ்.எம்.இ. பொருளாதார ரீதியாக செய்யும் உதவிகளைப் பற்றி அவர் கூறும்போது, “ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் போன்று ஒரு சான்றிதழ் பெற்று தொழில் செய்ய ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்குகிறோம். இது ஒரு புதிய திட்டமாகும். அதாவது, ஒரு பொருளை உற்பத்தி செய்யும் சமயத்தில் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இருக்கக்கூடாது. இதில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்து வதற்காக 10 பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இவைதவிர, பொருட்களுக்கான பார்கோடு (அட்டையில் கோடுகோடாக இருக்கும்) வாங்கிக்கொள்ளலாம் என நினைக்கும் சிறு கம்பெனிகளுக்கு ரூ.75 ஆயிரம் வரை நிதியுதவி வழங்குகிறோம். பெரிய நிறுவனங்களுக்கு அடித்தளங்கள் வலுவாக உள்ளதால் அவற்றின் வளர்ச்சி விரிவாகவும், வேகமாகவும் அமைந்துவிடுகிறது. ஆனால் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் நிலை எதிர்பார்த்த வளர்ச்சியை அடைவதற்கு மிகவும் போராட வேண்டியுள்ளது. இத்தகைய நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவுவதுதான் எங்கள் தலையாயப் பணி” என்று தங்கள் கடமை உணர்வை வெளிப்படுத்தினார்.

“எம்.எஸ்.எம்.இ.-டி.ஐ-யின் சில முக்கியமான சேவைகளைச் சொல்ல வேண்டுமானால், தொழில்நுட்ப பயிற்சிகளையும், ஆலோசனைகளையும் (Technical /டெக்னாலஜி Training & consultancy/ counselling) வழங்குகிறோம். திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை (Skill Development Programme) வழங்குகிறோம். தொழில் சார்ந்த கருத்தரங்குகளை (Seminar / Workshop) நடத்துகிறோம். தொழில் சார்ந்த சந்திப்புகளையும், கண்காட்சிகளையும் (Trade Fair / Exhibitions / B2B Meet ) நடத்துகிறோம்.

குறு, சிறு தொழில் நிறுவனங்கள் MSME-DI யில் தங்கள் நிறுவனத்தைப் பதிவு செய்து MSME / SSI Registration certificate-ஐ பெறலாம். வாய்ப்புகளைத் தேடித் தருவதிலும், அரசு தரும் உதவிகளான அரசு நிதியுதவி, மானியங்கள், கடன் வாய்ப்புகள், சலுகைகள் போன்றவற்றைப் பெற்றுக்கொள்வதற்கான அடிப்படை உதவி முதல் தொழில் வளர்ச்சியின் மேம்பாட்டிற்கான ஒவ்வொரு அம்சத்திலும் MSME-DI தொழில் முனைவோருக்கு உதவி செய்கிறது.

குழும நிறுவனங்களின் (MSE Clusters) உருவாக்கத்திற்கும் அவற்றின் வளர்ச்சிக்கும் உதவி மற்றும் ஆலோசனைகளை வழங்குவதுடன், உற்பத்தித் திறன் மேம்பாடு, பொருட்களைச் சந்தைப்படுத்துதல், ஆய்வுக் கூடங்கள் அமைத்தல், சிறந்த கட்டமைப்புகளை உருவாக்குதல், புதிய படைப்பு, பரிசோதனைச் கூடங்கள் அமைத்தல், மூலப்பொருட்கள் கிட்டங்கி (Raw material Warehouse) அமைத்தல், பன்நோக்கு அணுகுமுறை, கூட்டுச் செயல்பாடு ,பொது விநியோகம், எளிதாகக் கூட்டு முயற்சியில் பொருட்களை சந்தைப்படுத்துதல், வர்த்தக அமைப்புகளுக்கென பொது குறியீடுகள், போட்டிகளை சமாளிக்கும் திறன் மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி போன்றவற்றைச் செயல்படுத்துவதற்கான உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்கி வழிகாட்டுகிறோம்.

மேலும் இவற்றைச் செயல்படுத்துவதற்கான மானியங்கள் மற்றும் நிதியுதவியை பெற்றுத் தருவதுடன், தொழில் முனைவோர் தங்கள் உற்பத்திப் பொருட்களை தேர்வுசெய்வதற்கும் மற்றும் தொழில் அமைப்பதற்கான இடத்தினைத் தேர்வுச் செய்வதற்கும் வழிகாட்டுகிறோம். உற்பத்தியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கிடையே சந்திப்புகளை (Buyer And Seller Meet) நடத்துவதன் மூலம் சிறு மற்றும் குறு நிறுவன உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களின் வாடிக்கையாளரைக் கண்டறிவதற்கு உதவுகிறோம்.

உற்பத்தியாளர்கள் தங்களின் உற்பத்தி பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும், தங்களுக்குத் தேவையான மூலப்பொருட்கள் மற்றும் இயந்திரங்களை இறக்குமதி செய்வதற்கும் வழிகாட்டுகிறோம்” என்று சொல்லும் ஜெயச்சந்திரன் என்னென்ன தொழிற்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன என்பதையும் தெரிவித்தார்.

“தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி மூலம் 100 வகை சுயதொழில் பயிற்சிகளைக் குறைந்த கட்டணத்தில் நடத்தி வருகிறோம். இதில், ரசாயனம் (Chemical), உணவுப் பொருட்கள் (Food Products), இயந்திரவியல் (Mechanical), மின்சாரம் மற்றும் மின்னணுப் பொருட்கள் (Electrical & Electronics) சார்ந்த பயிற்சிகள் அடங்கும். அத்துடன், தோல் பொருட்கள், மண்பாண்டம் மற்றும் கண்ணாடி பொருட்கள், சூரிய ஒளி மின்சாரம் (Solar Power) சார்ந்த பயிற்சிகள், ஆட்டோமொபைல் உள்ளிட்ட பல பயிற்சிகளை வழங்குகிறோம். இப்படி எண்ணற்ற பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கி தொழில் முனைவோருக்கு உதவிவருகிறோம்” என்றார். இளைஞர்களே நீங்களும் தனியாகத் தொழில் தொடங்கவும் முதலாளிகளாகவும் அரியவாய்ப்பு காத்துக்கிடக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். உழைப்பையும், முயற்சியையும் மூலதனமாக்கி நீங்களும் தொழில்முனைவோர் ஆகலாம்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.