பின்லேடன், காஷ்மீர் பிரச்சினையில் கவனம் செலுத்தியது அம்பலம் 4¾ லட்சம் கோப்புகளை வெளியிட்டது, அமெரிக்கா
அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன், நியூயார்க் உலக வர்த்தக மைய கட்டிடம் ஆகியவற்றின் மீது அல்கொய்தா பயங்கரவாதிகள், விமானங்களை மோதி மிகக்கொடூரமான தாக்குதல்களை நடத்தியதில் மூளையாக செயல்பட்டவர், ஒசாமா பின்லேடன். 2001–ம் ஆண்டு செப்டம்பர் 11–ந் தேதி நடந்த இந்த தாக்குதல்களில் சுமார் 3 ஆயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டது, வரலாற்றின் கருப்பு அத்தியாயமாக பதிவு ஆகி உள்ளது.
இந்த தாக்குதல் நடந்து சரியாக 10 ஆண்டுகள் ஆன நிலையில், 2011–ம் ஆண்டு, மே மாதம் 2–ந் தேதி பாகிஸ்தானில் அப்போட்டாபாத் நகரில் பதுங்கி இருந்தபோது, அமெரிக்க படைகள் துப்பாக்கிச்சூடு நடத்தி பின்லேடனை கொன்று பழி தீர்த்தது.
இந்த சம்பவம் நடந்து 6 ஆண்டுகள் முடிந்துள்ள இந்த தருணத்தில், பின்லேடன் கொல்லப்பட்டபோது, அவரது மறைவிடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட சுமார் 4¾ லட்சம் கோப்புகளை அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் உத்தரவின்பேரில், அந்த நாட்டின் உளவுத்துறை சி.ஐ.ஏ., நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது. அந்த ஆவணங்களில் பின்லேடனின் அந்தரங்க டைரியும் அடங்கும்.
இந்த கோப்புகளில் இருந்து காஷ்மீர் பிரச்சினையை பின்லேடன் உன்னிப்பாக கவனித்து வந்ததும், மும்பை தாக்குதல் (2008–ம் ஆண்டு நவம்பர் 26–ந் தேதி நடந்தது) பயங்கரவாதி டேவிட் ஹெட்லி மீதான வழக்கு விசாரணையில் ஆர்வம் காட்டியதும் அம்பலத்துக்கு வந்துள்ளது.
பாகிஸ்தான் அரசை சீர்குலைப்பதற்கு தலீபான்களுக்கு அல்கொய்தா உதவுகிறது என 2010–ம் ஆண்டு, பிப்ரவரி 9–ந் தேதி பி.டி.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்திக்கட்டுரை, பின்லேடன் கம்ப்யூட்டரில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது.
பின்லேடன் கம்ப்யூட்டரில் ஹாலிவுட் சினிமாக்கள், குழந்தைகளுக்கான கார்ட்டூன் படங்களும், பின்லேடன் பற்றிய 3 செய்திப்படங்களும் இருந்தது தெரியவந்துள்ளது.
2 டஜன் வீடியோக்கள் மற்றும் குறிப்பிட்ட ஆவணங்களை மட்டும் தேசப்பாதுகாப்பு நலன் கருதி வெளியிடாமல் சி.ஐ.ஏ. நிறுத்தி வைத்துள்ளது.