ஆசிய கோப்பை பெண்கள் ஆக்கி: இறுதிப்போட்டியில் இந்திய அணி
9–வது ஆசிய கோப்பை பெண்கள் ஆக்கி போட்டி ஜப்பானில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, நடப்பு சாம்பியன் ஜப்பானை எதிர்கொண்டது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 7–வது நிமிடத்தில் இந்திய அணி முதல் கோல் அடித்தது. பெனால்டி கார்னர் வாய்பை பயன்படுத்தி குர்ஜித் கவுர் இந்த கோலை அடித்தார். 9–வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை நவ்ஜோத் கவுர் கோல் அடித்து அணியின் முன்னிலையை அதிகரித்தார். அதேநிமிடத்தில் குர்ஜித் கவுர் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி மீண்டும் ஒரு கோல் போட்டார். இதனால் இந்திய அணி 3–0 என்ற கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது.
உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் ஆடிய ஜப்பான் அணி 17–வது மற்றும் 28–வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பியது. முறையே சுஜி ஷிஹோ, இஷிபாஷி யுய் ஆகியோர் இந்த கோலை அடித்து இந்திய அணிக்கு நெருக்கடி அளித்தனர். இருப்பினும் இந்திய அணி தொடர்ந்து அபாரமாக செயல்பட்டு ஜப்பானின் வேகத்துக்கு முட்டுக்கட்டை போட்டது.
38–வது நிமிடத்தில் இந்திய அணி 4–வது கோலை போட்டது. லால் ரென்சியாமி இந்த கோலை அடித்தார். அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் இந்திய அணி 4–2 என்ற கோல் கணக்கில் ஜப்பானை அதன் சொந்த மண்ணில் சாய்த்து 4–வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.