ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் இந்தியாவில்தான் அதிகம்: ஆய்வில் தகவல்
இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பான அசோசெம் மற்றும் இங்கிலாந்தின் ஆய்வு நிறுவனமான யர்னஸ்ட் யங் (இஒய்) சார்பில் ஊட்டச்சத்து தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டது.
இதில், 2015ம் ஆண்டு இறுதி நிலவரப்படி இந்தியாவில் 40 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் இருப்பதாக தெரியவந்துள்ளது. பச்சிளம் குழந்தைகள் மரணம், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மரணம் கடந்த 10 ஆண்டுகளில் குறைந்துள்ளது. எனினும், உலகில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளில் 50 சதவீத குழந்தைகள் இந்தியாவில் உள்ளது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 37 சதவீத குழந்தைகள் எடை குறைவுடன் உள்ளனர். 39 சதவீத குழந்தைகள் வளர்ச்சி குன்றிய நிலையிலும், 21 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்தே இல்லாமலும், 8 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் கடுமையாக பாதிக்கப்பட்டும் இருந்தது தெரியவந்துள்ளது.
வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் விகிதம் 2005-06ல் 48 சதவீதமாக இருந்தது. அது, 2015-16ல் சற்று 48 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால், ஊட்டச்சத்தே இல்லாமல் நோஞ்சானாகிப் போன குழந்தைகளின் விகிதம் சற்று உயர்ந்துள்ளது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.