சென்னையில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்-சென்னை வானிலை மையம்
தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கைக்கு அருகே ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சியானது கடந்த 2-ந்தேதி அதே இடத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. அன்றைய தினம் மாலையில் காற்றின் வேகம் அதிகரிப்பால் காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்ந்து வட தமிழகத்தின் கரைப்பகுதிக்கு வந்தது. இதனால் சென்னை உள்பட வட கடலோர மாவட் டங்களில் 30 செ.மீ. அளவுக்கு மழை கொட்டியது.
காற்றழுத்த தாழ்வு பகுதியானது தொடர்ந்து வட தமிழக கடலோர பகுதிகளிலும், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளிலும் அதே இடத்தில் நீடிக்கிறது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களிலும் புதுவையிலும் மழைபெய்து வருகிறது. உள் மாவட்டங்களிலும் தென் தமிழக கடலோர மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இன்றும் நாளையும் அடுத்த 24 மணிநேரத்துக்கு மழை நீடிக்கும் என்றும் 6-ந்தேதி மழை எச்சரிக்கை எதுவும் இல்லை என்றும் டெல்லி இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனால் 7-ந்தேதியும், 8-ந்தேதியும் அந்தமான் நிகோபர் தீவுகளில் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை மைய இயக்குனர் பால்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
காற்றழுத்த தாழ்வு நிலை, தென்மேற்கு வங்கக்கடல் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் தெற்கு ஆந்திரக்கரை வரை நிலவி வருகிறது . தமிழகம், புதுவையில் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. சென்னையில் நவ.1 முதல் இதுவரை வழக்கத்தை விட 93% பருவமழை பெய்துள்ளது. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்,சில நேரங்களில் கனமழை இருக்கும். சென்னையில் மாலை வேளைகளில் விட்டுவிட்டு இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என கூறினார்.