கர்ப்பிணி பெண்ணை 10 கி.மீ. சுமந்து சென்று பிரசவம் பார்த்த டாக்டர்! இரு உயிரையும் காப்பாற்றினார்
ஒடிசாவில் மால்கங்கிரி மாவட்டத்தில் சாரிகேட்டா மலை கிராமத்தில் ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவவலி ஏற்பட்டது. மாவட்டம் நக்சலைட் தீவிரவாதம் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதியாகும். முழுமையாக அடிப்படை வசதிகள் சென்றடையாத பகுதியாகும் உள்ளது.
கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவவலி ஏற்பட்டது தொடர்பாக தகவல் அறிந்ததும் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் டாக்டர் ஓம்கர் கோடா (31) விரைந்து சென்றார். ஆனால் அப்பெண்ணுக்கு பிரசவம் சிக்கலாக இருந்தது. கடுமையான ரத்த போக்கு ஏற்பட்டது.
இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் இருந்தார். எனவே, அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை இருந்தது. ஆஸ்பத்திரிக்கு 10 கி.மீட்டர் தூரம் செல்ல வேண்டும்.
வாகன வசதி எதுவும் இல்லாததால் அவரை தூக்கி செல்ல வேண்டியிருந்தது. ஆனால் உதவிக்கு யாரும் வரவில்லை. எனவே டாக்டர் ஓம்கர் கோடா அப் பெண்ணை தூக்கிச் செல்ல முயன்றார். ஆனால் மலைவாழ் இன வழக்கப்படி வேறு ஆண் நபர் பெண்களை தொடக்கூடாது என தெரிவிக்கப்பட்டது. எனவே கர்ப்பிணி பெண் கட்டிலில் படுக்கவைக்கப்பட்டார். பின்னர் டாக்டர் கோடா பெண்ணின் கணவர் உதவியுடன் கட்டிலை மலைப்பாதைதில் சுமந்து சென்றார். சுமார் 10 கி.மீட்டர் தூரம் 3 மணி நேரம் நடந்தபடி தூக்கி சென்று பாபுலூர் என்ற இடத்தில் உள்ள பொது சுகாதார மைய ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
அங்கு கர்ப்பிணிக்கு 18 மணி நேரம் தீவிர சிகிச்சை அளித்தார். அதை தொடர்ந்து அப்பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. தாயும் குழந்தையும் தற்போது நலமாக உள்ளனர். ஒடிசாவில் கடந்த ஆண்டு தானா மஜ்கி என்பவர் ஆஸ்பத்திரியில் இறந்த தனது மனைவி உடலை வீட்டுக்கு தூக்கி செல்ல ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டது. எனவே அவர் மனைவி உடலை பல கிலோ மீட்டர் தூரம் தோளில் சுமந்து சென்றார்.
ஆனால் டாக்டர் ஓம்கர் கோடா மனிதாபிமானத்துடன் ஒரு கர்ப்பிணியை 10 கி.மீட்டர்தூரம் நடந்தபடி தூக்கி சென்றுள்ளார். அப்பெண்ணையும், பிறந்த குழந்தையையும் காப்பாற்றி உள்ளார். அவரது மனிதாபிமானம் பாராட்டத்தக்கது.
டாக்டரை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
சரியான நேரத்தில் மட்டும் மருத்துவர் உதவி செய்யவில்லை என்றால் என்னுடைய மனைவி மற்றும் குழந்தையை இழந்து இருப்பேன் என அந்த பெண்ணின் கணவர் மருத்துவருக்கு நன்றியை தெரிவித்து உள்ளார். இன்னும் நேரம் தாழ்த்தி இருந்தால் உயிருக்கு பெரும் ஆபத்தாக இருந்து இருக்கும், சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது, உதவி செய்தவர்களுக்கு நன்றி என மருத்துவர் கூறிஉள்ளார்.