போபாலில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மைய மாணவி கற்பழிப்பு 4 பேர் கைது
மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலை சேர்ந்த போலீஸ் தம்பதியர் ஒருவரின் மகள் மகாரானா நகர் பகுதியில் உள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் சிவில் சர்வீசஸ் தேர்வுக்காக படித்து வந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை அவர் படிப்பை முடித்துவிட்டு இரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது வழிமறித்த 4 பேர் அவரை கடத்திச் சென்று ஹாபிகஞ்ச் ரெயில் நிலையம் அருகே கற்பழித்தனர். பின்னர் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
இதுபற்றி அந்த மாணவி போலீசில் புகார் தெரிவித்தார். ஆனால் அவருடைய புகாரை ஏற்காமல் போலீசார் இழுத்தடித்து வந்தனர். இதுபற்றி மாநில முதல்–மந்திரி சிவராஜ் சிங் சவுகானின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து கற்பழிப்பில் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்தனர். வழக்கு பதிவு செய்யாமல் அலட்சியம் காட்டிய 5 போலீசார் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டனர்.