நிலம் கையகப்படுத்தாமல் புதிய ரெயில் பாதை திட்டம் தொடங்குவது இல்லை
திண்டிவனம்–நகரி, மொரப்பூர்–தர்மபுரி இடையிலான புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டங்கள், நிலம் கையகப்படுத்த முடியாததால், முடங்கிப் போயுள்ளன.
இதனை சுட்டிக் காட்டியுள்ள ரெயில்வே வாரியம், நிலங்கள் கையகப்படுத்தும் பணியை முடிக்காமல், புதிய ரெயில் பாதை திட்டங்களை தொடங்குவது இல்லை என்று புதிய கொள்கை முடிவு எடுத்துள்ளது.
இதுகுறித்து ரெயில்வே வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘நிலம் கையகப்படுத்தும் பொறுப்பு, அந்தந்த மாநில அரசுகளையே சாரும். மாநில அரசுகள், நிலம் குறித்து உத்தரவாதம் அளித்தால் மட்டுமே புதிய ரெயில் பாதை தொடர்பான டெண்டர் விடுதல் உள்ளிட்ட பணிகளை தொடங்குவது என்று முடிவு செய்துள்ளோம். இதன்மூலம், திட்டம் பாதியிலேயே நிற்கும் நிலை தவிர்க்கப்படும்’ என்றார்.