வரிவிதிப்பு முறையை எளிமைப்படுத்த ஜி.எஸ்.டி. ஆலோசனை குழுவுக்கு 6 பேர் நியமனம்
மத்திய அரசு கடந்த ஜூலை மாதம் 1–ந்தேதி அறிமுகம் செய்த சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி.) கடுமையாக இருப்பதாக வர்த்தகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து இதை எளிமைப்படுத்தவும் வரி விதிப்பு கட்டமைப்பை பகுத்தறியவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து ஜி.எஸ்.டி. கவுன்சிலின் சட்ட ஆய்வு கமிட்டிக்கு உதவிட 6 பிரதிநிதிகள் கொண்ட ஆலோசனை குழு மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லியின் ஒப்புதலுடன் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த குழு ஜி.எஸ்.டி. வரிச் சட்டம் மற்றும் அதன் விதிமுறைகளில் செய்யக் கூடிய மாறுதல்கள் குறித்து விவாதித்து அது தொடர்பான பரிந்துரைகளை சட்ட ஆய்வு கமிட்டியிடம் வருகிற 30–ந்தேதி தாக்கல் செய்யும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த குழுவின் முதல் கூட்டம் வருகிற 8–ந்தேதி நடக்கிறது.