தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் -மாநில தேர்தல் ஆணையம்
தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டே முடிவடைந்த நிலையில், அவற்றுக்கான தேர்தல் நடத்துவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை 15 நாட்களுக்குள் வெளியிட மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி ‘தமிழ்நாடு பொது நல வழக்குக்கான மையம், மதுரை’ சார்பில் கே.கே.ரமேஷ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
விசாரணை நடந்தது
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ரஞ்ஜன் கோகாய், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் அரியமா சுந்தரம், மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் மூத்த வக்கீல் ரஞ்சித் குமார், மனுதாரர் தரப்பில் வக்கீல் ஜெயசுகின் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.
இந்த வழக்கு விசாரணை தொடங்கியதும் தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்தின் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் வருமாறு:-
தொகுதி மறுவரையறை
தமிழ்நாட்டில் தொகுதி மறுவரையறை தொடர்பான வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. 1991 மக்கள் தொகை கணக்கின்படி முன்பு தொகுதி மறுவரையறை செய்யப்பட்டது. தற்போது 2011-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும்.
இது தொடர்பான வழக்கு ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி ஜே.செல்லமேஸ்வர் தலைமையிலான அமர்வு முன்பு நிலுவையில் உள்ளது. தொகுதி மறுவரையறை குறித்த அறிவிப்பு இப்போதுதான் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த பணிகள் அடுத்த ஆண்டு (2018) ஜனவரி மாதத்தில்தான் முடிவடையும். இந்த அறிக்கை பிப்ரவரி மாதத்தில்தான் தாக்கல் செய்யப்படும். எனவே அதற்கு பிறகுதான் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு தேர்தல் நடத்த முடியும்.
எனவே, இந்த வழக்கை தொகுதி மறுவரையறை கோரி தி.மு.க. ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் தொடுத்துள்ள வழக்குடன் இணைத்து விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும்
இவ்வாறு தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் சார்பில் வாதிடப்பட்டது.
ஏற்க தேவையில்லை
இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் ஜெயசுகின் ஆட்சேபம் தெரிவித்தார். அவர் தனது வாதத்தில், ‘சென்னை ஐகோர்ட்டு ஏற்கனவே இது தொடர்பான வழக்கை முழுக்க விசாரித்து அனைத்து அம்சங்களையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு செப்டம்பர் 17-ந் தேதி தேர்தலை அறிவித்து நவம்பர் 17-ந் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. எனவே, தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்க தேவையில்லை’ என்று குறிப்பிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள தொகுதி மறுவரையறை தொடர்பான வழக்குடன் இந்த வழக்கையும் இணைத்து விசாரிக்க உத்தரவிட்டனர்.