அயோத்தி பிரச்சினைக்கு தீர்வு காண வரைவு ஒப்பந்தம் ஷியா மத்திய வக்பு வாரியம் தகவல்
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து உத்தரபிரதேச ஷியா மத்திய வக்பு வாரியத்தின் தலைவர் வாசிம் ரிஸ்வி லக்னோ நகரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரச்சினைக்குரியதாக உள்ள இடத்தில் மசூதி கட்டுவதை எங்கள் வாரியம் விரும்பவில்லை. அதை முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் கட்டிக் கொள்ளலாம். அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டப்படவேண்டும். இதுதொடர்பாக அயோத்தியில் மடாதிபதிகளையும், சாமியார்களையும் சந்தித்து பேசுவேன்.
அயோத்தி பிரச்சினைக்கு சுமுகமாக தீர்வு காண வரைவு ஒப்பந்தம் ஒன்றை தயார் செய்து வருகிறோம். பரஸ்பர சம்மதத்துக்காக இது டிசம்பர் 6-ந்தேதி அன்று தயார் நிலையில் இருக்கும். இந்த ஒப்பந்தத்தின் மீதான விதிமுறைகள், நிபந்தனைகள் பற்றி பலரிடமும், மனுதாரர்களிடமும் விவாதிக்கப்பட்டு விட்டது.
ராமர் பிறந்த இடத்திலோ அல்லது அதன் அருகிலோ மசூதி கட்டவேண்டும் என்று கோரிக்கை விடுப்பவர்களின் நோக்கம் இந்த பிரச்சினை வெகுகாலம் நீடிக்கவேண்டும் என்பதே ஆகும். இடிக்கப்பட்ட மசூதி ஷியா வக்பு வாரியத்துக்கு சொந்தமானது. எனவே இதில் எவ்விதத்திலும் முஸ்லிம் தனிநபர் சட்டம் வாரியம் உரிமை கொண்டாடி முடிவெடுக்க இயலாது. ஷியா வாரியத்துக்கு மட்டுமே இதை தீர்மானிக்கும் உரிமை உண்டு.
இவ்வாறு அவர் கூறினார்.