ஆசிய பெண்கள் குத்துச்சண்டை: மேரிகோம், சோனியா இறுதிப்போட்டிக்கு தகுதி
ஆசிய கோப்பை குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மேரிகோம், சோனியா ஆகியோர் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்து அசத்தியுள்ளனர்.
ஆசிய குத்துச்சண்டை
8–வது ஆசிய பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி வியட்நாமில் நடந்து வருகிறது. இதில் 48 கிலோ எடைப்பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை மேரிகோம், ஜப்பானின் சுபாசா கோமுராவை சந்தித்தார். தொடக்கத்தில் எச்சரிக்கையுடன் தடுப்பாட்ட அணுகுமுறையை கையாண்ட மேரிகோம் அதன் பிறகு எதிராளிக்கு சில அதிரடியான குத்துகளை விட்டார். அவரது தாக்குதலை சமாளிக்க முடியாமல் கோமுரா திணறினார். முடிவில் மேரிகோம் 5–0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 5–வது தங்கப்பதக்கத்துக்கு குறி வைத்துள்ள மேரிகோம் இறுதி ஆட்டத்தில் வடகொரியாவின் கிம் ஹியாங் மியை இன்று சந்திக்கிறார்.
மூன்று குழந்தைகளின் தாயாரான மேரிகோம், 2012–ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் பெற்றதும், 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றதும் நினைவு கூரத்தக்கது.
மேரிகோம் மகிழ்ச்சி
வெற்றிக்கு பிறகு மணிப்பூரை சேர்ந்த 35 வயதான மேரிகோம் கூறுகையில், ‘நீண்ட இடைவெளிக்கு பிறகு களம் திரும்பிய நிலையில், இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கோமுரா கடும் சவால் கொடுப்பார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் எளிதாக சமாளித்து விட்டேன். இப்போது இறுதிப்போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். அதே சமயம் இறுதி ஆட்டம் குறித்து அதிகமாக சிந்தித்து எனக்குள் நெருக்கடி உருவாக்க விரும்பவில்லை.
இந்த தொடரில் இதுவரை எப்படி செயல்பட்டேனோ அதே போன்று இறுதி ஆட்டத்திலும் எனது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். பதக்கம் வெல்வது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்’ என்றார்.
சோனியா வெற்றி
மற்றொரு இந்திய வீராங்கனை சோனியா லாதர், 57 கிலோ உடல் எடைப்பிரிவில் நடந்த அரைஇறுதியில் உஸ்பெகிஸ்தானின் யோட்கோரோய் மிர்ஜாவாவுடன் மோதினார். இதில் ஆக்ரோஷமாக மல்லுகட்டிய சோனியா லாதர், ஆட்டத்தின் இறுதியில் நடுவர்களின் தீர்ப்புபடி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் அவருக்கு தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் உறுதியாகி இருக்கிறது. அரியானாவைச் சேர்ந்த சோனியா லாதர் இறுதி சுற்றில் சீனாவின் யின் ஜூன்ஹிவாவை எதிர்கொள்கிறார்.
மற்ற ஆட்டங்களில் இந்திய மங்கைகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. முன்னாள் உலக சாம்பியன் சரிதாதேவி (64 கிலோ), பிரியங்கா சவுத்ரி (60 கிலோ), லவ்லினா போர்கோஹைன் (69 கிலோ), சீமா பூனியா (81 கிலோவுக்கு மேல்) மற்றும் ஷிக்ஷா ஆகிய இந்தியர்கள் தங்களது அரைஇறுதி ஆட்டங்களில் தோற்று வெண்கலப் பதக்கத்துடன் திருப்திப்பட்டுக் கொண்டனர்.