Breaking News
பணம் மதிப்பு நீக்க நடவடிக்கையை திட்டமிட்ட கொள்ளை என்பதா? மன்மோகன்சிங்குக்கு அருண்ஜெட்லி கண்டனம்

நமது நாட்டின் வரலாற்றில் நவம்பர் 8-ம் நாள் மறக்க முடியாத நாளாக பதிவாகி விட்டது.

கடந்த ஆண்டு இதே நாள் இரவில்தான் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு டெலிவிஷனில் உரை ஆற்றினார். அப்போது அவர் கருப்பு பணத்தை ஒழிப்பதற்காகவும், பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி குவிவதை தடை செய்யவும் ஏதுவாக ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை செல்லாது என அதிரடியாக அறிவித்து, பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தார்.

நாட்டின் பொருளாதார மேதைகளில் ஒருவர் என அறியப்படுகிற முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஆமதாபாத்தில் தொழில் அதிபர்கள் மத்தியில் நேற்று பேசும்போது, “உயர் மதிப்பு ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு பொறுப்பற்ற நடவடிக்கை, இது திட்டமிட்ட கொள்ளை, சட்டப்படியான கொள்ளை” என மிகக்கடுமையாக விமர்சித்தார்.

இதையொட்டி மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி டெல்லியில்  நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

அப்போது அவர் மன்மோகன் சிங்குக்கு கண்டனம் தெரிவித்தார். “எதிர்க்கட்சி (காங்கிரஸ்) குற்றம் சாட்டுவதற்கு மாறாக, அவர்களது ஆட்சியின்போதுதான் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், காமல்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் என பல ஊழல்களால் நாடு கொள்ளையடிக்கப்பட்டது” என்று அவர் சாட்டினார்.

மேலும் “கருப்பு பணத்துக்கு எதிரான ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை, ஒரு நெறிமுறையான நடவடிக்கை. தார்மீக நடவடிக்கை. தார்மீக அடிப்படையிலும் சரி, நெறிமுறை அடிப்படையிலும் சரி, சரியான ஒரு நடவடிக்கை, அரசியல் ரீதியிலும் சரியான நடவடிக்கைதான்” என்று கூறி மத்திய அரசின் நடவடிக்கையை நியாயப்படுத்தினார்.

கருப்பு பணத்துக்கு எதிராக அத்தகைய பெரிய நடவடிக்கை எதையும் முந்தைய அரசாங்கம் எடுக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் முக்கிய நோக்கமே ‘குடும்பத்துக்கு’ பணியாற்றுவதுதான். ஆனால் பாரதீய ஜனதா கட்சியோ நாட்டுக்கு பணியாற்றத்தான் விரும்புகிறது.

ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை, இந்திய பொருளாதாரத்தில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை. இதனால் பல நன்மைகள் கிடைத்துள்ளன.

உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கையால் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி செல்வது ஒடுக்கப்பட்டுள்ளது.  ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையால் கூடுதல் பணம் வங்கிகளுக்கு வந்துள்ளது. கடந்த ஓராண்டு காலத்தில் பொருளாதார ஆதாரம் அதிகரித்துள்ளது. காப்பீட்டு துறையில், தொழிலாளர் வைப்பு நிதிகளில் கூடுதல் பணம் வந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.