பனிப்பொழிவால் காற்றில் மாசு அதிகரிப்பு: டெல்லியில் பள்ளிக் கூடங்களை சில நாட்களுக்கு மூட கெஜ்ரிவால் உத்தரவு
டெல்லியில் தற்போது குளிர்காலம் தொடங்கி விட்டது. இதனால் நள்ளிரவுக்கு மேல் பனிப்பொழிவும் உள்ளது. இந்த தாக்கத்தின் காரணமாக கடந்த 2 நாட்களாக காற்றில் மாசு அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நிலைமை மோசம் அடைந்தது. மெல்லிய போர்வை போன்ற அடர்த்தியான மாசு நகரை சூழந்து இருந்தது. அதாவது சராசரி அளவை விட பல மடங்கு மாசு காற்றில் அதிகரித்து காணப்பட்டது.
இதுபற்றி மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் நேற்று காலை வெளியிட்ட அறிக்கையில், நகரில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையை எட்டி உள்ளது என்று குறிப்பிட்டு இருந்தது. இதையடுத்து இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் கே.கே.அகர்வால் மற்றும் தலைமைச் செயலாளர் ஆர்.என்.தாண்டன் ஆகியோர் டெல்லி மாநில துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பினர்.
பள்ளிகளுக்கு விடுமுறை
அதில் டெல்லி நகரில் காற்றின் தரம் குறைந்த நிலையில் இருந்து மிகவும் மோசம் என்னும் நிலையை எட்டி உள்ளது. இதனால் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர்களின் உடல்நலம் பெரிதும் பாதிக்கப்படலாம். எனவே பள்ளிகளில் திறந்தவெளி மற்றும் உள்ளரங்க மைதானங்களில் விளையாட்டு உள்ளிட்ட குழந்தைகளுக்கான எந்த நிகழ்ச்சிகளையும் நடத்தவேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து டெல்லி மாநிலத்தில் பள்ளிகளை சில நாட்களுக்கு மூடுவது குறித்து பரிசீலிக்கும்படி துணை முதல்-மந்திரியை கேட்டுக் கொண்டு இருப்பதாக மாநில முதல்-மந்திரி கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்தார்.
சுவாச கவசம்
இதனிடையே, டெல்லி விமான நிலையம், மெட்ரோ ரெயில் நிலையங்கள் மற்றும் அரசு அமைச்சகங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள 9 ஆயிரம் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினருக்கு பனிப்பொழிவு மாசுவை சமாளிக்க சுவாச கவசம் வழங்கப்பட்டு உள்ளது.
டெல்லியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதமும் இதேபோல் காற்றில் மாசு அதிகமாக காணப்பட்டதால், அப்போதும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் சுவாச கவசம் அணிந்து பணியில் ஈடுபட்டது, நினைவு கூரத்தக்கது.
பசுமை தீர்ப்பாயம் கண்டனம்
இந்த நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவரும், நீதிபதியுமான சுவதந்தர் குமார் தலைமையிலான அமர்வு டெல்லியில் காற்று மாசு அதிகரித்து இருப்பது தொடர்பாக டெல்லி, உத்தரபிரதேசம், அரியானா மாநில அரசுகளை வன்மையாக கண்டித்தது.
அப்போது நீதிபதிகள் அமர்வு, “காற்றின் தரம் மோசமடைந்ததால் அதை கட்டுப்படுத்துவற்கு ஹெலிகாப்டர் மூலம் நீரைத் தெளிக்கும்படி முன்பே யோசனை தெரிவித்து இருந்தோம். அதை ஏன் செயல்படுத்தவில்லை. இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்து விட்டு நாளை(அதாவது இன்று) எங்களுக்கு தெரிவியுங்கள்” என்று உத்தரவிட்டனர்.
விமான சேவை பாதிப்பு
டெல்லி நகரில் நேற்று காற்றில் மாசு புகை மூட்டம் போல் காணப்பட்டதால் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த மாசு காரணமாக நேற்று காலை 7 மணி முதல் 8 மணி வரை இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் 200 மீட்டர் தொலை தூரத்துக்கு அப்பால் எதுவும் கண்களில் தென்படவில்லை. இதனால் விமான நிலையத்தில் உள்ள 3 ஓடுபாதைகளில் நேற்று ஒன்றை மட்டுமே பயன்படுத்த முடிந்ததால் விமானங்களை இயக்குவது 2 மணிநேரம் பாதிப்புக்கு உள்ளானது.
நேற்று காலையில் மட்டும் 90 விமானங்கள் டெல்லி விமான நிலையத்துக்கு தாமதமாக வந்தன. மேலும் பல விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன. 2-வது ஓடுபாதை பிற்பகல் 3 மணிக்கு மேல் வழக்கம் போல் செயல்படத் தொடங்கியது. 3-வது ஓடுபாதை பராமரிப்புக்காக அடுத்த 3 நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
காரணம் என்ன?
இதுபற்றி மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறுகையில், “டெல்லியில் டிசம்பர், ஜனவரி மாதங்கள்தான் குளிர்காலம். என்றபோதிலும் வழக்கமாக நவம்பர் மாதமே குளிர் அடிக்கத் தொடங்கிவிடும். இந்த குளிர்கால பனிப்பொழிவும், தூசு காரணமாக உருவாகும் மாசுவும் சேர்ந்து காலைப்பொழுதை மாற்றி விடுகின்றன. காலை 9 மணிவரை சூரியனே தெரியாத நிலையை அவை உருவாக்குகின்றன. இதனால் சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு அப்பால் உள்ள பொருட்களை காண முடியாமல் போகிறது. இதன்காரணமாகத்தான் ரெயில் மற்றும் விமான போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுகிறது” என்றனர்.
குளிர்காலத்தின் தொடக் கமே இப்படி இருந்தால், கடும் பனிக்காலத்தை கடப்பது சிரமமான காரியம் என்று டெல்லி நகரவாசிகள் கூறுகிறார்கள். பனிக்காலத்தை முன்னிட்டு டெல்லியில் தற்போது கம்பளி ஆடைகள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.