மழையால் 8 ஓவர்களாக குறைப்பு: கடைசி 20 ஓவர் போட்டியில் இந்தியா வெற்றி தொடரை கைப்பற்றியது
மழையால் 8 ஓவர்களாக குறைக்கப்பட்ட நியூசிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் 2–1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
மழையால் 8 ஓவர் ஆட்டம்
இந்தியா– நியூசிலாந்து அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட கிரீன்பீல்டு ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது. இது இந்தியாவின் 19–வது சர்வதேச 20 ஓவர் போட்டி மைதானமாகும். 55 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட இந்த ஸ்டேடியம் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
ஆனால் மாலையில் இருந்தே திருவனந்தபுரத்தில் பலத்த மழை கொட்டியதால் போட்டி நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்தது. எப்படியோ வருணபகவான் வழிவிட்டதால், 2½ மணி நேரம் பாதிப்புக்கு பிறகு ஆட்டம் தொடங்கியது. 12 ஓவர்கள் குறைக்கப்பட்டு 8 ஓவர் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது.
இந்திய அணியில் அக்ஷர் பட்டேல், முகமது சிராஜ் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக மனிஷ் பாண்டே, குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டனர். நியூசிலாந்து அணியில் ஒரே ஒரு மாற்றமாக ஆடம் மில்னே கழற்றி விடப்பட்டு டிம் சவுதி அழைக்கப்பட்டார்.
இந்தியா 67 ரன்
ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் ‘டாஸ்’ ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் தயக்கமின்றி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி இந்தியாவின் இன்னிங்சை தொடங்கிய ஷிகர் தவானும் (6 ரன், 6 பந்து) ரோகித் சர்மாவும் (8 ரன், 9 பந்து) நியூசிலாந்தின் பந்து வீச்சில் தடுமாறினார்கள். இருவருக்கும் ஒரே ஓவரில் டிம் சவுதி ‘செக்’ வைத்தார். அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி சுழற்பந்து வீச்சாளர் சோதியின் பந்து வீச்சில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். ஆனால் அதே ஓவரில் அவரும் (13 ரன்) அவுட் ஆகிப்போனார்.
இது குறுகிய ஓவர் போட்டி என்பதால் இந்திய வீரர்கள் துரிதமாக ரன்களை சேர்ப்பதில் முனைப்பு காட்டினர். ஆனால் நியூசிலாந்தின் மிரட்டலான பந்து வீச்சு மற்றும் அபாரமான பீல்டிங்கால் இந்திய வீரர்களால் பெரிய அளவில் ஸ்கோரை திரட்ட முடியவில்லை. ஸ்ரேயாஸ் அய்யர் 6 ரன்னிலும் (6 பந்து), மனிஷ் பாண்டே 17 ரன்களிலும் (11 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேறினர்.
நிர்ணயிக்கப்பட்ட 8 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் சேர்த்தது. ஹர்திக் பாண்ட்யா 14 ரன்களுடன் (10 பந்து, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார். கடைசி ஓவரில் இறங்கிய டோனிக்கு பந்துகளை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. நியூசிலாந்து தரப்பில் டிம் சவுதி, சோதி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
நியூசிலாந்து திணறல்
அடுத்து களம் இறங்கிய நியூசிலாந்துக்கு, இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்தனர். குறைவான ஸ்கோர் என்றாலும் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை, இந்திய பவுலர்கள் துல்லியமாக பந்து வீசி திணறடித்தனர். அபாயகரமான பேட்ஸ்மேனான மார்ட்டின் கப்தில் (1 ரன்), முந்தைய ஆட்டத்தின் ‘ஹீரோ’ காலின் முன்ரோ (7 ரன்) இருவரும் இந்திய வேகப்பந்து வீச்சுக்கு இரையானார்கள்.
இதன் பிறகு இலக்கை நோக்கி பயணிக்க முடியாமல் நியூசிலாந்து தள்ளாடியது. வில்லியம்சன் 8 ரன்னிலும் (ரன்–அவுட்), விக்கெட் கீப்பர் கிளைன் பிலிப்ஸ் 11 ரன்னிலும், ஹென்றி நிகோல்ஸ் 2 ரன்னிலும், டாம் புரூஸ் 4 ரன்னிலும் (ரன்–அவுட்) பெவியன் திரும்பினர். கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. பரபரப்பான 8–வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் ஹர்திக் பாண்ட்யா வீசினார். முதல் 2 பந்தில் ஒரு ரன் விட்டுக்கொடுத்தார். 3–வது பந்தை கிரான்ட்ஹோம் பந்தை சிக்சருக்கு தூக்கியடித்து டென்ஷனை எகிற வைத்தார். 4–வது பந்தை வைடாக வீசிய பாண்ட்யா மீண்டும் வீசிய 4–வது பந்தில் ஒரு ரன் கொடுத்தார்.
இதனால் 2 பந்தில் 10 ரன்கள் தேவையாக இருந்தது. கடைசி இரு பந்துகளை நேர்த்தியாக வீசிய பாண்ட்யா அதில் 3 ரன் மட்டுமே வழங்கி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். நியூசிலாந்து அணியால் 8 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 61 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் இந்திய அணி 6 ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை ருசித்தது. கிரான்ட்ஹோம் 17 ரன்களுடன் (10 பந்து, 2 சிக்சர்) களத்தில் இருந்தார். எக்ஸ்டிரா வகையில் இந்தியா 8 ரன்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது. பும்ரா 2 விக்கெட்டுகளும், புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருது இரண்டையும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பெற்றார்.
முதல்முறையாக தொடரை வென்றது
தோல்வியையடுத்து நியூசிலாந்து அணி 20 ஓவர் அணிகளின் தரவரிசையில் முதலிடத்தை பறிகொடுத்தது. அதே நேரத்தில் இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 20 ஓவர் தொடரை 2–1 என்ற கணக்கில் தனதாக்கி வரலாறு படைத்தது. நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரை இந்தியா வெல்வது இதுவே முதல் முறையாகும். முன்னதாக முதலாவது ஆட்டத்தில் இந்தியாவும், 2–வது ஆட்டத்தில் நியூசிலாந்தும் வெற்றி கண்டிருந்தன. இவ்விரு அணிகள் இடையிலான ஒரு நாள் தொடரையும் இந்தியா 2–1 என்ற கணக்கிலேயே கைப்பற்றி இருந்தது.