‘‘வேலை இல்லாமல் தவிக்கிறேன்’’ இந்திய ஆக்கி கோல் கீப்பர் சவிதா வேதனை
வேலை இல்லாமல் தவிப்பதாக ஆசிய பெண்கள் ஆக்கி போட்டியில் வெற்றிக்கு வித்திட்ட இந்திய கோல் கீப்பர் சவிதா கூறியுள்ளார்.
தாயகம் திரும்பினர்
ஜப்பானில் சில தினங்களுக்கு முன்பு நடந்த 9–வது ஆசிய கோப்பை பெண்கள் ஆக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி பெனால்டி ஷூட்–அவுட் முறையில் 5–4 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி 13 ஆண்டுகளுக்கு பிறகு மகுடம் சூடியது.
பெனால்டி ஷூட் அவுட்டில், எதிரணியின் முக்கியமான ஷாட்டை தடுத்து நிறுத்தி வெற்றிக்கு பக்கபலமாக திகழ்ந்த இந்திய கோல் கீப்பர் சவிதா புனியா தொடரின் சிறந்த கோல் கீப்பராக தேர்வு செய்யப்பட்டார். இந்த தொடரில் தோல்வியே சந்திக்காத இந்திய வீராங்கனைகள் மொத்தம் 28 கோல்கள் அடித்து அமர்க்களப்படுத்தினர்.
சவிதா புலம்பல்
இந்த நிலையில் இந்திய வீராங்கனைகள் நேற்று டெல்லி திரும்பினர். அவர்களுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அரியானாவைச் சேர்ந்த கோல் கீப்பர் சவிதா கூறியதாவது:–
இந்திய அணியின் வெற்றிக்கு எனது பங்களிப்பை நல்கியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் பல வெற்றிகளை கொண்டு வர கடினமாக உழைக்கிறேன். ஆனால் எனக்கு ஒரு நிரந்தர வேலையில்லாமல் அவதிப்படுகிறேன்.
கடந்த 9 ஆண்டுகளாக வேலைக்காக முயற்சிக்கிறேன். அரியானா மாநில அரசு வேலை தருவதாக உறுதி அளித்தது. ஆனால் உத்தரவாதம் மட்டுமே கிடைக்கிறதே தவிர வேலை தருவதாக இல்லை. எனக்கு இப்போது 27 வயது ஆகிறது. இன்னும் எனது தந்தையின் வருமானத்தை நம்பியே இருக்க வேண்டி இருக்கிறது.
வேலை இல்லையே…
இந்தியாவுக்காக 9 ஆண்டுகளாக விளையாடி வருகிறேன். ஒவ்வொரு முறையும் வெற்றி பெறும் போதெல்லாம் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். ஆனால் எதுவும் நடப்பதில்லை. எனது தந்தை ஒரு மருந்தாளுனர். அவரது வருமானத்தை கொண்டு மட்டும் குடும்பத்தை நடத்துவது கஷ்டமாக இருக்கிறது. எனக்கு ஒரு வேலை கிடைக்கவில்லையே என்று எனது தாயார் வருத்தப்படுகிறார். இந்த சூழ்நிலையிலும் எனது தந்தை என்னை ஊக்கப்படுத்த தவறுவது இல்லை.
வேலை இல்லை என்ற நினைப்பு ஒரு போதும் ஆட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். ஆனால் போட்டி இல்லாத காலங்களில் இந்த நினைப்பை தவிர்க்க முடியவில்லை. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர் தான் இப்போது மத்திய விளையாட்டுத்துறை மந்திரியாக இருக்கிறார். அவர் எனது நிலைமையை புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன். இந்த ஆசிய பட்டம் எனக்கு வேலை கிடைக்க உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு சவிதா கூறினார்.
தரவரிசையில் முன்னேற்றம்
இதற்கிடையே, ஆசிய கோப்பையை வென்று சாதனை படைத்த இந்திய பெண்கள் அணி, தரவரிசையில் 2 இடங்கள் முன்னேறி 10–வது இடத்தை பிடித்துள்ளது. ஐரோப்பிய சாம்பியனான நெதர்லாந்து முதலிடத்திலும், இங்கிலாந்து 2–வது இடத்திலும், அர்ஜென்டினா 3–வது இடத்திலும் தொடருகிறது. ஆண்கள் ஆக்கி தரவரிசையில் இந்திய அணி 6–வது இடத்தில் உள்ளது.