இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை நீதிமன்றம் தான் முடிவு செய்யும் டி.டி.வி.தினகரன் பேட்டி
சிறையில் உள்ள சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரை சந்திக்க அ.தி.மு.க. (அம்மா) அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், இளவரசியின் மகன் விவேக், விவேக்கின் மனைவி கீர்த்தனா 12 பேர் நேற்று பெங்களூரு வந்திருந்தனர். இவர்கள் அனை வரும் முறைப்படி அனுமதி பெற்று சிறைக்குள் சென்றனர்.
சுதாகரன் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு முதல் முறையாக அவரை பார்ப்பதற்காக அவருடைய மனைவி சத்தியவதி நேற்று சிறைக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சசிகலாவை சந்தித்த பிறகு சிறை வளாகத்தில் டி.டி.வி.தினகரன் நிருபர் களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சி.பி.ஐ. விசாரணைக்கு வலியுறுத்தல்
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கின் விசாரணை காலதாமதம் ஆகவில்லை. முறையாக விசாரிக்க நேரம் ஆகும். வழக்கு விசாரணையில் ஓ.பன்னீர் செல்வம்-எடப்பாடி பழனிசாமி அணியினர் போலியான ஆவணங்களை தாக்கல் செய்து உள்ளனர். இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை நீதிமன்றம் தான் முடிவு செய்யும். நிச்சயமாக இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும்.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.
கமலுக்கு வரவேற்பு
தமிழகத்தில் தற்போது இடி அமீன் ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழக அமைச்சர்கள் காமெடியன்கள் போல் செயல்படுகிறார்கள். காமெடியன்களை விட தற்போது இவர்களுக்கு தான் மவுசு அதிகம்.
நடிகர் கமல் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது. யார் வேண்டுமானலும் அரசியலுக்கு வந்து கட்சி தொடங்கலாம். பண மதிப்பிழப்பு நடவடிக்கை தொடக்கத்தில் சரி என்று தோன்றினாலும் அது அவசரகதியில் எடுக்கப்பட்ட முடிவு என இப்போது தோன்றுகிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏராளமான தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறினார்.