இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற விசாரணை முடிந்தது தேர்தல் கமிஷன் தீர்ப்பு ஒத்திவைப்பு
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டாக உடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியின் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷன் முடக்கியது.
இதைத்தொடர்ந்து, இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று கோரி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அடங்கிய ஆளும் ஒருங்கிணைந்த அணியினரும், டி.டி.வி.தினகரன் அணியினரும் தேர்தல் கமிஷனிடம் தனித்தனியாக மனுக்களையும், தங்களுக்கு ஆதரவான ஆவணங்களையும் தாக்கல் செய்தனர். (சசிகலா சிறை சென்றதால் அவரது தலைமையிலான அணி டி.டி.வி.தினகரன் தலைமையில் செயல்பட்டு வருகிறது)
இதுபற்றி டெல்லியில் தேர்தல் கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த பிரச்சினை தொடர்பாக டி.டி.வி.தினகரன் அணியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது பற்றி நவம்பர் 10-ந் தேதிக்குள் (நாளை) முடிவு செய்து அறிவிக்குமாறு தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டது.
இந்த சூழ்நிலையில் கடந்த திங்கட்கிழமை தேர்தல் கமிஷனின் 6-வது கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில், தலைமை தேர்தல் கமிஷனர் ஏ.கே.ஜோதி தலைமையில் நேற்று 7-வது கட்ட விசாரணை நடைபெற்றது. மாலை 4 மணிக்கு விசாரணை தொடங்கியது.
விசாரணை தொடங்கியதும் ஒருங்கிணைந்த அணியின் தரப்பில் மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி வாதாடினார். தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷன் எங்கள் தரப்புக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு முகுல் ரோகத்கி கூறினார்.
இதைத்தொடர்ந்து, டி.டி.வி.தினகரன் அணியின் சார்பில் ஆஜரான வக்கீல் ராஜா செந்தூர் பாண்டி, தங்கள் தரப்பில் மேலும் எதிர்வாதங்களை முன்வைக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.
அதை தலைமை தேர்தல் கமிஷனர் ஏ.கே.ஜோதி நிராகரித்தார். விசாரணை முடிவடைந்து விட்டதால் தீர்ப்பை ஒத்திவைத்து அவர் உத்தரவிட்டார்.
இருதரப்பிலும் மேலும் ஏதாவது வாதங்களை முன்வைக்க வேண்டும் என்றால் வருகிற திங்கட்கிழமைக்குள் எழுத்து வடிவில் தாக்கல் செய்யலாம் என்று அப்போது அவர் கூறினார்.