சசிகலாவின் கணவர், குடும்பத்தினர் வீடுகளில் ஐடி ரெய்டு
சசிகலா, தினகரன் ஆகியோரின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், ஆதரவாளர்கள், உதவியாளர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் இன்று (நவ.,09) காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
தினகரன், திவாகரன், இளவரசியின் மகள் வீடு, இளவரசியின் மகன் நடத்தி வரும் நிறுவனம், தஞ்சையில் உள்ள தினகரனின் மாமனார் சுந்தரவதனத்தின் வீடு, மன்னார்குடியில் உள்ள திவாகரனின் வீடு உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது தஞ்சையில் உள்ள மகாதேவன் வீடு, டாக்டர் வெங்கடேஷ் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனையை துவக்கி உள்ளனர். திருச்சியில் உள்ள இளவரசியின் சம்பந்தி கலியபெருமாள் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் உள்ள தினகரனின் வீடு, சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான மால்கள் உள்ளிட்டவற்றிலும் சோதனை நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள சசிகலாவின் ஆதரவாளரான மர வியாபாரி ஒருவருக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.
தஞ்சை அருளானந்தநகரில் உள்ள சசிகலாவின் கணவர் நடராஜன் வீ்டடிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கை காரணமாகவும், வரி ஏய்ப்பு புகார் காரணமாகவும் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. காலை 6.30 மணி முதல் நடந்து வரும் இந்த சோதனையில் ஏராளமான அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.