டோனியை விமர்சிப்பது நியாயமற்றது இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டி
இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. மழை பாதிப்பால் 8 ஓவர்களாக நடத்தப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 5 விக்கெட்டுக்கு 67 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 17 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 14 ரன்களும், கேப்டன் விராட் கோலி 13 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து களம் இறங்கிய நியூசிலாந்தை 8 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 61 ரன்களில் இந்திய பவுலர்கள் கட்டுப்படுத்தினர். இதன் மூலம் 6 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதுடன் 20 ஓவர் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முன்னதாக நியூசிலாந்துக்கு எதிராக முடிவை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியிலும் இதே போன்று தான் இந்திய அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
வெற்றிக்கு பிறகு பேட்டி அளித்த இந்திய கேப்டன் விராட் கோலியிடம், விக்கெட் கீப்பர் டோனியின் ‘பார்ம்’ குறித்து நிருபர்கள் சரமாரி கேள்வி எழுப்பினர்.
ராஜ்கோட்டில் நடந்த 2-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு டோனியின் (37 பந்தில் 49 ரன்) மந்தமான பேட்டிங்கே காரணம் என்று விமர்சனங்கள் எழுந்தன. இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் டோனி 20 ஓவர் போட்டியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் வி.வி.எஸ்.லட்சுமண், அகர்கர் ஆகியோர் போர்க்கொடி தூக்கினர். “அணியில் டோனியின் பணி என்ன என்பதை அவருக்கு அணி நிர்வாகம் விளக்க வேண்டும். டோனி முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாட வேண்டும்” என்று மற்றொரு முன்னாள் வீரர் ஷேவாக் கூறியிருந்தார்.
\
இத்தகைய விமர்சனங்களுக்கு எல்லாம் கேப்டன் விராட் கோலி சுடச்சுட பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-
டோனியை குறி வைத்து ஏன் விமர்சிக்கிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு பேட்ஸ்மேனாக 3 ஆட்டங்களில் நான் சரியாக ஆடாவிட்டாலும் என்னை யாரும் குறை சொல்வது இல்லை. ஏனெனில் நான் 35 வயதை கடந்த வீரர் அல்ல.
36 வயதிலும் டோனி முழு உடல்தகுதியுடன் இருக்கிறார். எல்லா வகையான உடல்தகுதி சோதனையிலும் தேர்ச்சி பெற்று இருக்கிறார். களத்தில் அணி வகுக்கும் ஒவ்வொரு வியூகங்களிலும் அவரது பங்களிப்பு மகத்தானது. பேட்டிங்கை எடுத்துக் கொண்டால், இலங்கை, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்களில் உண்மையிலேயே நன்றாக ஆடினார்.
\\
இந்த தொடரை பொறுத்தவரை அவருக்கு பேட் செய்ய அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. டோனி எந்த பேட்டிங் வரிசையில் விளையாடுகிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ராஜ்கோட் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா கூட தான் (1 ரன்) ஜொலிக்கவில்லை. வந்த வேகத்தில் ஆட்டம் இழந்தார். அப்படி இருக்கும் போது ஒரு மனிதர் மீது மட்டும் வேண்டுமென்றே தாக்குதல் தொடுப்பது ஏன்? அவரை விமர்சிப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை.
ராஜ்கோட் ஆட்டத்தில் டோனி களம் இறங்கிய சமயத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு ஓவருக்கு அப்போதே 8.5 ரன்களோ அல்லது 9.5 ரன்களோ தேவையாக இருந்தது. ஆடுகளம் கூட தொடக்கத்தில் இருந்ததை போல் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இல்லை. பிற்பகுதியில் அதன் தன்மை வெகுவாக மாறியிருந்தது. அது மட்டுமின்றி ஏற்கனவே களத்தில் நிற்பவர்களால் பந்தை எளிதில் கணித்து விளையாட முடியும். ஆனால் புதிதாக களத்திற்குள் வருபவர்களால் உடனடியாக பந்தை அடித்து நொறுக்க முடியாது.
ஆட்டத்தின் போக்கு எந்த நிலையில் இருக்கிறது? எந்த சூழலில் பேட்ஸ்மேன் ஆட வருகிறார், ஆடுகளத்தன்மை எப்படி உள்ளது? என்பதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஒரு அணியின் நிர்வாகமாக இதை நாங்கள் நன்கு புரிந்து வைத்து இருக்கிறோம்.
டோனி தனது பணியை அருமையாக செய்து கொண்டு இருக்கிறார். தனது ஆட்டத்தை மேம்படுத்த கடினமாக உழைக்கிறார். அணியில் தனது பங்களிப்பு என்ன? என்பதை தெளிவாக புரிந்து வைத்துள்ளார்.
டெல்லியில் நடந்த முதலாவது 20 ஓவர் போட்டியில் சந்தித்த முதல் பந்திலேயே டோனி சிக்சர் அடித்து அசத்தினார். போட்டி முடிந்த பிறகு அந்த காட்சி 5 முறை மெகா திரையில் காண்பிக்கப்பட்டது. உடனடியாக அடுத்த ஆட்டத்தில் ரன் எடுக்க வில்லை என்பதற்காக அவர் மீது பாய்வது சரியில்லை. மக்களுக்கு பொறுமை தேவை.
டோனி மிகவும் புத்திசாலி. தனது ஆட்டமும், உடல்தகுதியும் எந்த நிலையில் இருக்கிறது என்பதை புரிந்து வைத்திருப்பவர். எனவே அவரது விஷயத்தில் முடிவு எடுக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது.
இவ்வாறு கோலி கூறினார்.