நாட்டின் பொருளாதார வளத்தை மோடி சுரண்டி விட்டார் ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் ஓராண்டு நிறைவையொட்டி, ஆங்கில பத்திரிகை ஒன்றில், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஒரு கட்டுரை எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
பண மதிப்பு நீக்க நடவடிக்கை, சிந்திக்காமல் எடுக்கப்பட்ட முடிவு. ஒரு துயர நிகழ்வு. பிரதமரின் இந்த நடவடிக்கையால், லட்சக்கணக்கான இந்தியர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டது. அவர்களுக்கு நாம் துணை நிற்போம்.
பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் நோக்கம், ஊழலை ஒழிப்பதுதான் என்று மோடி கூறுகிறார். ஆனால், கடந்த 12 மாதங்களில் அவர் அழித்த ஒரே விஷயம், முன்பு வளமாக இருந்த பொருளாதாரத்தைத்தான்.
வேலை இழப்பு
அவரது சீர்திருத்த நடவடிக்கைகள், நாட்டின் பொருளாதார வளத்தை சுரண்டி விட்டன. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2 சதவீதம் வீழ்ச்சி அடைந்து விட்டது. தொழிலாளர் துறையை சீரழித்து விட்டது. சிறிய, நடுத்தர தொழில்களை அழித்து விட்டது.
பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் முதல் 4 மாதங்களில், 15 லட்சம்பேர் வேலை இழந்து விட்டனர். வேலையில்லா திண்டாட்டத்தால் ஏற்பட்ட மக்களின் கோபத்தை வகுப்புவாத வெறுப்புணர்வாக மாற்றி இந்தியாவை சீரழித்து விட்டார், மோடி.
அவசர கதியில் அமலுக்கு கொண்டுவரப்பட்ட ஜி.எஸ்.டி. வரியும் நமது பொருளாதாரத்தின் மீது தொடுக்கப்பட்ட மற்றொரு தாக்குதல் ஆகும். அரசு அதிகாரிகளுக்கு அளவற்ற அதிகாரத்தை கொடுத்து, ‘லைசென்ஸ்’ ராஜ்யத்தை உருவாக்கி விட்டது.
இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ப.சிதம்பரம் வலியுறுத்தல்
இதற்கிடையே, முன்னாள் மத்திய நிதி மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட ரிசர்வ் வங்கி போர்டு கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலையும், அந்த முடிவு பற்றி ரகுராம் ராஜன் சமர்ப்பித்த கருத்தையும் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் வெளியிட வேண்டும். தங்கள் முடிவில் அரசுக்கு நம்பிக்கை இருந்தால், இந்த ஆவணங்களை வெளியிட தயங்குவது ஏன்? ஒளிவுமறைவற்ற தன்மைக்காக இவற்றை வெளியிட வேண்டும்.
பண மதிப்பு நீக்கத்தால், கருப்பு பணம் ஒழிந்து விட்டதாக அரசு கூறுகிறது. குஜராத் தேர்தல் பிரசாரத்தில் அந்த கருப்பு பணம் தலை தூக்குவதை எல்லோரும் பார்க்கப்போகிறார்கள்.
ரிசர்வ் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம்
தற்போது, மக்களிடம் ரூ.15 லட்சம் கோடி ரொக்கப்பணம் புழக்கத்தில் உள்ளது. பண மதிப்பு நீக்கத்தின்போது இருந்ததை போல, அது விரைவிலேயே ரூ.17 லட்சம் கோடியாக உயரப் போகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, டெல்லியில் ரிசர்வ் வங்கி தலைமையகம் முன்பு, இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இளைஞர் காங்கிரஸ் தலைவர் அமரிந்தர் சிங் ராஜா தலைமை தாங்கினார்.