விஜய் மல்லையா தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படுவார் டெல்லி கோர்ட்டு உத்தரவு
பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடி செய்த பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா தற்போது இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ளார். அவரை நாடு கடத்த கோரும் வழக்கு லண்டன் கோர்ட்டில் நடந்து வருகிறது.
இதற்கிடையே தனது கிங்பிஷர் நிறுவனத்தின் சின்னத்தை உலக கார்பந்தய சாம்பியன் போட்டியில் காண்பிப்பதற்காக 1996, 97, 98-ம் ஆண்டுகளில் இங்கிலாந்து நிறுவனம் ஒன்றுக்கு அன்னிய செலாவணி ஒழுங்குமுறை சட்ட விதிமுறைகளை மீறி 2 லட்சம் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ.1¼ கோடி) வழங்கியதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இதுபற்றிய விசாரணைக்கு வரும்படி விஜய் மல்லையாவுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.
இதையடுத்து அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் டெல்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு அவர் மீது கைது வாரண்டு பிறப்பித்தது. பின்னர் ஜாமீனில் வெளிவரமுடியாத வகையில் கைது செய்யவும் உத்தரவிட்டது. ஆனால் அவர் தலைமறைவாக இருப்பதால் கைது நடவடிக்கை பலன் அளிக்கவில்லை.
இதுதொடர்பான வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அமலாக்கத்துறை சார்பில் விஜய் மல்லையாவை கைது செய்ய முடியவில்லை என்று மாஜிஸ்திரேட்டு தீபக் ஷெராவத்திடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இறுதி வாய்ப்பாக அடுத்த மாதம் (டிசம்பர்) 18-ந்தேதி அன்று கோர்ட்டில் விஜய் மல்லையாக ஆஜராகும்படியும், அப்படியும் ஆஜராகவில்லை என்றால் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை அமலாக்கத்துறை தொடங்கலாம் என்று மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.