‘உடல் தகுதியுடன் இருந்தால் என்னை யாரும் வீழ்த்த முடியாது’ மேரிகோம் நம்பிக்கை
வியட்நாமில் நடந்த 8–வது ஆசிய பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மேரிகோம் 48 கிலோ உடல் எடைப்பிரிவில் 5–வது முறையாக தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். நாடு திரும்பிய மேரிகோம் குர்கானில் நேற்று அளித்த பேட்டியில், ‘நீண்ட நாட்களாக கடினமாக பயிற்சி எடுத்து வருகிறேன். நான் முழு உடல் தகுதியுடன் இருக்கும் போது என்னால் யாரையும் வீழ்த்த முடியும். இதேபோல் உடல் தகுதியை தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டால் என்னை யாரும் நெருங்க கூட முடியாது. 48 கிலோ உடல் எடைப்பிரிவு ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்பட்டால் மகிழ்ச்சி அடைவேன். அடுத்த ஆண்டு கோல்டு கோஸ்டில் (ஆஸ்திரேலியா) நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டி தான் எனது அடுத்த இலக்காகும். எனது ஆட்டத்தை ரசித்து செய்து வருகிறேன். எனக்கு நெருக்கடி எதுவும் கிடையாது. நெருக்கடியால் எனது ஆட்ட திறன் பாதிக்கப்படாது’ என்று தெரிவித்தார்.
பேட்டியின் போது அருகில் இருந்த இந்திய குத்துச்சண்டை சம்மேளன தலைவர் அஜய்சிங் கூறுகையில், ‘இந்திய குத்துச்சண்டை வீராங்கனைகளுக்கு விரைவில் வெளிநாட்டு பயிற்சியாளர் நியமிக்கப்படுவார். இதற்காக சில பெயர்களை நாங்கள் பரிசீலனை செய்து வைத்துள்ளோம்’ என்றார்.