ஓரிரு தினங்களில் இரட்டை இலை சின்னம் உறுதியாக கிடைத்துவிடும் ஓ.பன்னீர்செல்வம்
தேனி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
இன்றைக்கு சதி செய்து, சூழ்ச்சி செய்து இரட்டை இலை சின்னத்தை முடக்கிவிடலாம் என்று பல்வேறு கனவுகளை கண்டு கொண்டு பொய் சாட்சிகளை தயார்படுத்தி, டெல்லியிலே இந்திய தேர்தல் ஆணையத்திலே கொடுத்திருக்கிறார்கள். இன்னும் ஒரு சில நாட்களிலே ஒரு நல்ல முடிவு வரும்.
எம்.ஜி.ஆருடைய சின்னம் வெற்றி சின்னம் இரட்டை இலை. அந்த இரட்டை இலை தான் தொடர்ந்து 27 ஆண்டு காலம் நமக்கு வெற்றி பெற்று தந்து இருக்கிறது. 27 ஆண்டுகாலம் ஆட்சியிலே நாம் இருந்து இருக்கிறோம். கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் கூட ஜெயலலிதா தனது உடல்நிலையை பாராமல் அனைத்து தொகுதிகளுக்கும் வந்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள், என்னுடைய அன்புத்தம்பிகளான வேட்பாளர்களை வெற்றிபெற செய்யுங்கள் என்று தான் அவர் வாக்கு கேட்டார்.
நாங்களும் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கு சென்று வாக்கு கேட்டோம். எங்களுக்கு வாக்கு போடுங்கள் என்று ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்கவில்லை. பின் எப்படி கேட்டோம். ஜெயலலிதாவை தமிழகத்தின் முதல்-அமைச்சராக ஆக்குவதற்கு எங்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றுதான் கேட்டோம்.
மக்களும் ஜெயலலிதா தான் முதல்-அமைச்சராக வரவேண்டும் என்று தான் வாக்களித்தார்கள். இரட்டை இலை சின்னத்தில் நின்று நாம் வெற்றி பெற்றோம். அந்த இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்கு எப்படித்தான் அவர்களுக்கு மனம் வந்ததோ தெரியவில்லை. அதற்கு இன்னும் ஓரிரு தினங்களில் உறுதியாக இரட்டை இலை சின்னம் நம்முடைய கைக்கு வந்து சேரும்.
அ.தி.மு.க. என்ற சரித்திரம் வாய்ந்த இயக்கத்தினை சிறு குண்டுமணி அளவு கூட யாரும் சிதைத்துவிட முடியாது என்பதை இந்தக் கூட்டத்தின் மூலமாக தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.