சென்னையில் 2-வது விமான நிலையம் அமைக்க தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை
இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவர் குருபிரசாத் மொஹபத்ரா கூறியதாவது:-
சென்னையில் 2-வது விமான நிலையம் அமைப்பது குறித்து விமான போக்குவரத்து செயலாளர் ஆர்.என்.சவுபே மற்றும் ஆணைய அதிகாரிகள் கடந்த 3 மாதங்களில் தமிழக அரசுடன் 2 முறை பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள்.
ஒன்றரை வருடங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு மணி நேரத்துக்கு 28 விமான இயக்கங்கள் கையாளப்பட்டன. விமான போக்குவரத்து முறையில் சில முன்னேற்ற பணிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் ஒரு மணி நேரத்துக்கு 40 விமானங்கள் இயக்கப்படும் என நம்புகிறோம். இந்த வசதியுடன் சென்னை விமான நிலையத்தை 2030 அல்லது 2035-ம் ஆண்டு வரை நிர்வகிக்க முடியும் என்றும் நம்புகிறோம்.
ஆசிய பசிபிக் விமான போக்குவரத்து மையத்தின் ‘திங்-டேங்’ விமான போக்குவரத்து நிறுவனம் நடத்திய கணக்கெடுப்புபடி சென்னை விமான நிலையத்தில் 2016-ம் ஆண்டில் 1 கோடியே 84 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
திட்டமிட்ட 12.5 சதவீதம் என்ற விகிதத்தில் போக்குவரத்து அதிகரித்தால் 2020-ம் ஆண்டில் இது அதிகபட்ச அளவான 2 கோடியே 30 லட்சம் முதல் 2 கோடியே 60 லட்சம் பயணிகள் வரை பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே சென்னை விமான நிலையத்தில் ஆண்டுக்கு 3 கோடி பயணிகள் பயன் படுத்தும் வகையில் விரிவு படுத்த வேண்டும் என்றால், விமான நிலைய வசதிகள் (விமானங்கள் நிற்குமிடம், ஓடுபாதை, விமான நிறுத்துமிடங்கள்) தடையாக இருப்பது மிகப் பெரிய சவாலாக இருக் கும்.
சென்னையில் 2-வது விமான நிலையம் அமைக்க சுமார் ரூ.3,350 கோடி செலவாகும் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது. பயன்படுத்தப்படாத நிலத்தில் புதிதாக பசுமை விமான நிலையம் தனியார் பங்களிப்புடன் அமைப்பதா? அல்லது விமான நிலைய ஆணையமே அமைப்பதா? என்பது பின்னரே முடிவு செய்யப்படும்.