டோனியின் ஆட்டத்தில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் மாற்று வீரரை தேர்வு செய்யலாம் கங்குலி யோசனை
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, தொலைக்காட்சிக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:–
இந்திய அணி நிர்வாகம் டோனியுடன் கலந்து பேசி, அணியில் அவருக்குரிய பொறுப்புகள் குறித்து விவாதிக்க வேண்டும். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெற வேண்டும் என்று சில விமர்சனங்கள் எழுந்துள்ளன. 20 ஓவர் கிரிக்கெட்டில் டோனி மிகப்பெரிய வீரர். இந்த விஷயத்தில் ஏதாவது முடிவு எடுப்பதற்கு முன்பாக அவர் மீண்டும் தன்னை நிரூபிக்க போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
இதே போல் 2019–ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) போட்டிக்கான இந்திய அணியில் அவருக்குரிய இடம் குறித்தும் அணி நிர்வாகம் யோசிக்க வேண்டியது அவசியமாகும். வருங்காலத்தில் டோனியால் தனது ஆட்டத்தில் முன்னேற்றம் காண இயலாவிட்டால், அணி நிர்வாகம் மாற்று ஏற்பாட்டுக்கு (அதாவது வேறு விக்கெட் கீப்பரை சேர்க்க) தயாராக இருக்க வேண்டும்.
பேட்டிங்கில் டோனியை முன்வரிசையில் விளையாட வைக்க வேண்டும் என்று நீண்டகாலமாக சொல்லி வருகிறேன். 4–வது வரிசையில் இறங்கும் போது, சிறிது நேரம் தடுப்பாட்டத்துடன் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு பிறகு வழக்கமான அதிரடியை தொடர்வதற்கு அவருக்கு உதவிகரமாக இருக்கும். டோனிக்கு, கேப்டன் கோலி ஆதரவாக பேசியிருப்பது பெரிய விஷயமாகும். டோனி சரியாக விளையாட சமயத்தில், கோலி அவருக்கு ஆதரம் கரம் நீட்டியுள்ளார். அந்த நம்பிக்கையை டோனி காப்பாற்ற நிறைய ரன்கள் எடுக்க வேண்டிய நேரம் இது.
இவ்வாறு கங்குலி கூறினார்.