தொடர் மழை எதிரொலி செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் நீர் மட்டம் உயர்வு
சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளுள் செம்பரம்பாக்கம் ஏரியும் ஒன்று. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கனஅடி ஆகும். நீர் மட்டம் 24 அடி. ஏரியின் பாதுகாப்பு கருதி தண்ணீர் 21 அடியை தொட்டதும் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்படும்.
வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக ஏரியின் நீர் மட்டம் 6 அடிக்கும் குறைவாக இருந்தது. கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகின்றது.
தற்போது ஏரியில் நீர் மட்டம் 13.85 அடியாகவும், நீர் இருப்பு 1,327 மில்லியன் கனஅடியாகவும் உள்ளது. ஏரிக்கு தற்போது 559 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியில் இருந்து 38 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தற்போது ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், ஏரி கடல் போல் காட்சி அளிக்கிறது. இதனை பொதுமக்கள் ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து பார்த்து விட்டு செல்கின்றனர்.
செம்பரம்பாக்கம் ஏரி குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருவதாலும், ஏரிக்கு வரும் சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாலும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் அனைத்து வழிகளிலும் உள்ள இரும்பு கதவுகள் வாகனங்கள் செல்லாத வகையில் பூட்டப்பட்டு உள்ளன.
ஏரியை பார்வையிட வரும் பொதுமக்கள், வாகனங்களை இரும்பு கதவுக்கு வெளியே நிறுத்தி விட்டு நடந்து மட்டும் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் அனைத்து நுழைவு வாயில்களிலும் ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் மிக முக்கியமானது புழல் ஏரியாகும். இதன் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கனஅடி. நேற்று முன்தினம் ஏரிக்கு வினாடிக்கு 1,542 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நீர் இருப்பு 1,278 மில்லியன் கனஅடியாக இருந்தது.
தொடர் மழையால் ஏரிக்கு நீர் வரத்து தொடர்ந்து வந்து கொண்டு இருப்பதால் ஏரியில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று ஏரியில் நீர் இருப்பு 1,302 மில்லியன் கனஅடியாகவும், நீர் வரத்து 362 கனஅடியாகவும் இருந்தது. ஏரிக்கு நீர் வரத்து குறைந்தாலும், ஒரே நாளில் ஏரியின் நீர் மட்டம் 24 மில்லியன் கனஅடி உயர்ந்து உள்ளது.