வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு கடலோரப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
அந்தமான் பகுதியில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் கடலோரப் பகுதிகளில் கனமழை கொட்டப்போவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த மழையில் ஈரம் காய்வதறகுள் அந்தமான் பகுதியில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
தெற்கு அந்தமான் அருகே தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டியுள்ள தென்மேற்கு வங்ககடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது தென்மேற்கு மற்றும் அதையொட்டிய தென் கிழக்கு வங்க கடல் பகுதி வரை மேலடுக்கு சுழற்சியாக பரவியுள்ளது. இலங்கை – தமிழகம் இடையேயான மன்னார் வளைகுடாவில் வளி மண் டல மேலடுக்கு சுழற்சி நீடிக்கிறது. இது தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது.
இதனால், இன்று முதல் திங்கட்கிழமை வரை (நவம்பர் 10 முதல் 13 வரை) கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், சென்னையில் ஒரு சில முறையும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை , தரமணி, திருவான்மியூர், புரசைவாக்கம், அண்ணாநகர், ஈக்காட்டுதாங்கல், ஆதரம்பாக்கம்,வேப்பேரி, புரசைவாக்கம், அடையார், மேற்கு மாம்பலம், போரூர், கோயம்பேடு, அண்ணாநகர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, புழுதிவாக்கம், திருப்போரூர், காரைக்கால், மதகடிப்பட்டு உள்பட பல இடங்களில் கனமழை பெய்தது
திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர், திருவொற்றியூர் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. புதுச்சேரியில் காலாப்பேட்டை, உப்பளம், முதலியார்பேட்டை, நெல்லித்தோப்பு, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.