சில தொழிலதிபர்கள் நலனுக்கே மத்திய அரசு ஜி.எஸ்.டி கொண்டு வந்துள்ளது: ராகுல் காந்தி விமர்சனம்
பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வரும் குஜராத்தில் வரும் டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடை பெற உள்ளது. மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 92 தொகுதிகளுக்கு மேல் வென்று பெரும்பான்மை பெறும் கட்சி. ஆட்சியை பிடிக்கும். குஜராத்தில் ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கும் இடையே இந்த தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது.
இரு கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. குஜராத்தில் உள்ள சபர்காந்தா இடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது:- “ சில தொழிலதிபர்கள் பயன் அடைவதற்கே ஜி.எஸ்.டியை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. மக்கள் மனதில் என்ன இருக்கிறது என தெரியாமல் பண மதிப்பிழப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு ரூ.35 ஆயிரம் கோடியை நாங்கள் வழங்கினோம். ஆனால் மோடி அரசு டாடா நானோ திட்டத்திற்கு 35 ஆயிரம் கோடியை வழங்கியது” இவ்வாறு பேசினார்.