Breaking News
ஜி.எஸ்.டி. வரி உச்சவரம்பை 18 சதவீதமாக நிர்ணயிக்கும் வரை போராட்டம் தொடரும் ராகுல்காந்தி அறிவிப்பு

ஜி.எஸ்.டி. வரி உச்சவரம்பை 18 சதவீதமாக நிர்ணயிக்கும் வரை காங்கிரசின் போராட்டம் தொடரும் என்று ராகுல்காந்தி கூறினார்.

வரி குறைப்புநாடு முழுவதும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான சரக்கு சேவை வரி(ஜி.எஸ்.டி.) கடந்த ஜூலை மாதம் 1–ந்தேதி முதல் 5, 12, 18, 28 என 4 விதமாக நிர்ணயிக்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கவுகாத்தியில் நடந்த 23–வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் 178 அத்தியாவசிய பொருட்களின் மீது விதிக்கப்பட்டு இருந்த அதிகபட்ச வரியை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டது. எனினும் கார், பிரிட்ஜ், ஏர்கண்டி‌ஷனர் உள்ளிட்ட 50 ஆடம்பர பொருட்களுக்கு ஏற்கனவே நிர்ணயித்த 28 சதவீத வரியில் எந்த மாற்றமும் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டது.

எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஜி.எஸ்.டி.யின் உச்சவரம்பான 28 சதவீத வரியை 18 சதவீதமாக நிர்ணயம் செய்யும்படி கோரிக்கை விடுத்து வருகிறது.

போராட்டம் தொடரும்இதை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது டுவிட்டர் பதிவில் மீண்டும் வலியுறுத்தினார். அதில், 28 சதவீத வரி விதிப்பு முறையே இருக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.

அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘‘இந்தியாவுக்கு தேவை எளிய ஜி.எஸ்.டி. வரிதான். கப்பார் சிங்(கொள்ளையர்) வரி அல்ல. காங்கிரசும், மக்களும் 28 சதவீதம் வரி விதிக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் மீதான வரியை 18 சதவீதமாக குறைக்கவேண்டும் என்று போராடினர். எனினும் எங்களை பொறுத்தவரை அதிகபட்ச உச்சவரம்பாக 18 சதவீதத்தை கொண்ட ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையே போதும் என்பதுதான். அதை நிர்ணயிக்கும்வரை எங்களது போராட்டம் தொடரும். இதை பா.ஜனதா செய்யாவிட்டால் நிச்சயம் காங்கிரஸ் செய்யும்’’ என்று குறிப்பிட்டார்.

நெருக்கடிகாங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ராகுல்காந்தி தொடர்ந்து கொடுத்த நெருக்கடி காரணமாகவே மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் மீதான வரி விகிதத்தை பா.ஜனதா அரசு குறைத்துள்ளது. மேலும் தேர்தல் ஆதாயத்துக்காக இந்த முடிவை எடுத்து இருக்கிறார்கள். ஆனால் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையின் கட்டமைப்பையே முழுமையாக மாற்றியமைக்கவேண்டும் என்பதுதான் காங்கிரசின் கோரிக்கை’’ என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.