இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மரபணு உடல் தகுதி சோதனை கிரிக்கெட் வாரியம் முடிவு
இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது வீரர்களின் உடல் தகுதி சோதனைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. வீரர்கள் யோ–யோ என்னும் உடல் தகுதி டெஸ்டில் தேர்ச்சி பெற்றால் தான் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியும் என்ற நிலை உள்ளது. யுவராஜ்சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோர் உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற முடியாததால் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் மரபணு உடல் தகுதி சோதனையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி வீரர்களின் சோதனை முடிவு தனியாக பராமரிக்கப்படும். அவர்களது உடல் தகுதியில் உள்ள குறைகள் கண்டறியப்பட்டு அதற்கு தகுந்தபடி அவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் எடுத்து கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள்.
இதன் மூலம் வீரர்களின் வேகத்தை அதிகரிக்க முடியும். அத்துடன் வீரர்களின் உடலில் உள்ள கொழுப்பின் அளவை ஒழிப்பது, உடல் ஆற்றலை அதிகரிப்பது, தசைநார்களை வலுப்படுத்துவது உள்பட பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்த இந்த சோதனை முடிவு உதவிகரமாக இருக்கும். இதுபோன்ற வீரர்களுக்கான உடல் தகுதி சோதனை முறை அமெரிக்காவில் கூடைப்பந்து மற்றும் கால்பந்து வீரர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. உடல் தகுதி நிபுணர் சங்கர் பாசுவின் ஆலோசனையின் படி கிரிக்கெட் வீரர்களுக்கு அறிமுகப்படுத்த இருக்கும் இந்த சோதனையை செய்ய ஒரு வீரருக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவு பிடிக்கும் என்று தெரிகிறது. இந்த உடல் தகுதி சோதனை முறையை விரைவில் அமல்படுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.