Breaking News
பலத்த மழையால் நாகை மாவட்டத்தில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது
நாகை மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் படகுகளை பயன்படுத்தி வருகிறார்கள்.

நாகை மாவட்டத்தில் தொடர்ந்து 9 நாட்கள் கனமழை பெய்தது. இதில் வேதாரண்யம் அருகே உள்ள தலைஞாயிறு பகுதியில் அதிகபட்சமாக மழை பெய்தது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. மேலும் வயல்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கடல்போல் காட்சியளிக்கிறது.

இதனால் வெள்ளம் பாதித்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்தநிலையில் முகாம்களில் உள்ள மக்களுக்கு தலைஞாயிறு பேரூராட்சி சார்பில் உணவு தயாரிக்கப்பட்டு படகுகள் மூலம் சென்று வழங்கப்பட்டு வருகிறது. மற்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க படகுகளை பயன்படுத்துகிறார்கள்.

தலைஞாயிறில் இருந்து உம்பளச்சேரி வழியாக கரியாப்பட்டினம் செல்லும் சாலையில் போக்குவாய்க்கால் உள்ளது. இந்த போக்கு வாய்க்காலில் உள்ள தரைப்பாலம் கனமழை காரணமாக மூழ்கியது. இடுப்பு அளவுக்கு மேல் தண்ணீர் செல்வதால் இந்த பாலத்தில் பொதுமக்கள் சென்று வர முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இதனால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தலைஞாயிறு உள்ளிட்ட பகுதிகளில் வயல்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் நெற்பயிர்கள் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதற்கிடையே வேளாங்கண்ணியில் இருந்து கடலில் மீன்பிடிக்க ஒரு படகில் சூசை மாணிக்கம் என்பவர் உள்பட 4 பேர் சென்றனர். கடலில் மீன்பிடித்தபோது திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டதால் படகு கவிழ்ந்தது. இதில் 4 பேரும் கடலில் விழுந்தனர்.

இதில் 3 பேர் மட்டும் நீந்தி கரைக்கு வந்தனர். சூசைமாணிக்கத்தை காணவில்லை. அவரை கடலோர காவல்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.