குஜராத்தில், பிரதமர் மோடி அதிரடி பிரசாரத்தில் குதிக்கிறார்
குஜராத்தில் அடுத்த மாதம் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் கட்சியான பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே பிரசாரம் மேற்கொண்டார். மேலும் மத்திய மந்திரிகளும் அங்கு முகாமிட்டு பிரசாரம் செய்து வருகிறார்கள்.
எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு துணைத்தலைவர் ராகுல்காந்தி மற்றும் மூத்த தலைவர்கள் ஆதரவு திரட்டி வருகின்றனர். கடந்த 3 நாட்களாக ராகுல்காந்தி குஜராத்திலேயே முகாமிட்டு வடக்கு குஜராத் பகுதியில் ‘நவசர்ஜன் யாத்திரா’ என்ற பெயரில் பிரசாரம் மேற்கொண்டார்.
இப்போது அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் மீண்டும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். குஜராத் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக நாளையும், நாளை மறுநாளும் பாரதிய ஜனதா பாராளுமன்ற குழு கூட்டம் நடைபெறுகிறது. அதில் வேட்பாளர்கள் இறுதி செய்யப்படுவார்கள்.
அதைத்தொடர்ந்து 20-ந்தேதியில் இருந்து பிரதமர் மோடி குஜராத்திலேயே முகாமிட்டு பிரசாரம் செய்ய உள்ளார். அவர் மாநிலத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்து ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏதாவது ஒரு இடத்தில் பெரிய பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
இதைத்தொடர்ந்து முக்கிய நகரங்களில் பிரதமரின் ரோடு ஷோ நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. சூரத், வதோதரா, அகமதாபாத், ராஜ்கோட் ஆகிய நகரங்களில் இந்த ரோடு ஷோ நிகழ்ச்சி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத் தேர்தலை முன்னிட்டு கடந்த 6 மாதத்தில் மட்டும் 10 தடவை பிரதமர் மோடி குஜராத் சென்றுள்ளார். அரசு நிகழ்ச்சிகள், கட்சி நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார். இது தேர்தல் பிரசாரத்தின் ஒரு முன்னோட்டமாக இருந்தது.
அகில இந்திய தலைவர் அமித்ஷா குஜராத்திலேயே முகாமிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், மாநில கட்சி தலைவர்கள், பூத் அளவிலான தொண்டர்கள் கூட்டம் ஆகியவற்றையும் நடத்தி தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.
மேலும் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியிலும் அவர் ஈடுபட்டுள்ளார். அவருடன் மத்திய மந்திரிகள் நிர்மலா சீத்தாராமன், பிரகாஷ் ஜவுடேகர், ஸ்மிருதி ராணி ஆகியோரும் வீடு, வீடாக சென்று ஓட்டுவேட்டை நடத்தி வருகிறார்கள்.
அடுத்ததாக 30 மத்திய மந்திரிகள் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். ஒவ்வொரு மந்திரிகளுக்கும் ஒவ்வொரு பகுதி பிரித்து கொடுக்கப்படுகிறது. அங்கிருந்து அவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள். பாரதிய ஜனதா தேர்தல் பிரசாரம் குஜராத் மாநிலத்தை கலக்கும் வகையில் அமைய வேண்டும் என்பதற்காக பல்வேறு யுக்திகளை கையாள திட்டமிட்டுள்ளனர்.