கோவையில் ஆட்சியர், அரசுத்துறை அதிகாரிகளுடன் ஆளுநர் திடீர் ஆலோசனை: செய்தியைப் பார்த்து நிகழ்விடத்துக்கு விரைந்த அமைச்சர் வேலுமணி
கோவை சென்றுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அம்மாவட்டத்தின் அரசுத் துறை உயரதிகாரிகளுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் அதிகாரிகள் ஆலோசனை குறித்த செய்தி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூட்டம் நடைபெறும் மாவட்ட சுற்றுலா மையத்துக்கு விரைந்தார்.
கோவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பாரதியார் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் கலந்து கொண்டார். அதன் பின்னர் மாவட்ட சுற்றுலா மையத்தில் தங்கிய அவர் கோவை மாவட்டத்தின் அரசு அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
மாவட்ட ஆட்சியர், போலீஸ் கமிஷனர், மாவட்ட எஸ்.பி., வேளாண் இயக்குநர், சுகாதாரத்துறை அதிகாரி, வனத்துறை அதிகாரி என 12 துறைகள் சார்ந்த அதிகாரிகள் ஆளூநர் ஆலோசனைக் கூட்டத்தில் இடம்பெற்றுள்ளனர்.
‘கிரண்பேடி பாணியில் ஆலோசனை’
ஆளுநராக பதவியேற்ற பின்னர் முதன் முறையாக பன்வாரிலால் கோவை வந்துள்ளதால் மாவட்ட நிர்வாகம் குறித்த விசாரணைக்காகவே அதிகாரிகளுடன் ஆலோசனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால், மாவட்ட அமைச்சர்களுக்கோ, பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் அன்பழகனுக்கோ இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்படாததால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பதவியேற்ற பின்னர் இதுபோலவே அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தற்போது, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்சிகள், தன்னார்வலர்களுக்கு அழைப்பு:
அதிகாரிகளுடனான ஆலோசனைக்குப் பின்னர் கோவை மாவட்டத்தில் அரசியல் கட்சியின் பொறுப்பாளர்களையும், சில தன்னார்வலர்களையும் ஆளுநர் சந்திக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கும் ஆளுங்கட்சி பொறுப்பாளர்கள் யாருக்கும் அழைப்பு ஏதும் விடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
தமிழகத்துக்கு ஓராண்டுக்குப் பிறகு முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டவர் பன்வாரிலால் புரோஹித் என்பது குறிப்பிடத்தக்கது.