தமிழக மாநில சாலைகளில் மதுக்கடைகள் திறக்க அனுமதியா?
நாடு முழுவதும், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரம் வரை உள்ள மதுபான கடைகளை மூடவேண்டும் என்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த 3,321 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டன.
இந்த நிலையில், மதுபான கடைகளை மூடாமல் இருக்கும் வகையில் சண்டிகார் அரசு மாநகராட்சி, நகராட்சி பகுதிகளின் வழியாக செல்லும் மாநில சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக பெயர் மாற்றம் செய்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இவ்வாறு சாலைகளின் பெயர்களை வகை மாற்றம் செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பு கூறியது.
இதைத்தொடர்ந்து தமிழகத்திலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் செல்லும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்றும் வகையில் அரசு சுற்றறிக்கை அனுப்பியது.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் கே.பாலு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் செல்லும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்ற தடை விதித்தது.
இந்த நிலையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பிய ஒரு சுற்றறிக்கையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள சாலைகளில் டாஸ்மாக் மதுபான கடைகளை உடனடியாக திறந்து அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இதை எதிர்த்து வக்கீல் பாலு ஐகோர்ட்டில் மீண்டும் ஒரு வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையரின் சுற்றறிக்கை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிரானது என்றும், எனவே மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையரின் உத்தரவை ரத்து செய்துவிட்டு புதிதாக திறக்கப்பட்டுள்ள 1,700 மதுபான கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு ஐகோர்ட்டில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகளை மூட சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் சில விளக்கங்களை கேட்டு தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும், அந்த விளக்கங்களை பெற்று அதன் அடிப்படையில் மதுபான கடைகளை திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழக அரசின் மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சண்டிகார் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு இந்தியா முழுவதற்கும் செல்லுபடி ஆகும் என்றும், ஆனால் இது தொடர்பாக விரைவில் எழுத்து வடிவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
நீதிபதிகள் இவ்வாறு கருத்து தெரிவித்து இருப்பதால், தமிழகத்தில் உள்ளாட்சி சாலைகளாக மாற்றுவதன் மூலம் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் திறக்க அனுமதிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.