பெரியகுளம்,கொடைக்கானல் ஏரிகளில் பாதரச கழிவு கலந்ததால் மீன்களில் நச்சு : பொதுமக்களுக்கு ஐஐடி எச்சரிக்கை
கொடைக்கானல் ஏரியிலும், பெரியகுளம் கண்மாய்யிலும் அதிக அளவு பாதரசம் கலந்துள்ளதால் அதில் இருந்து பிடிக்கப்படும் மீன்களை உண்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஐதராபாத் ஐஐடி அறிவித்துள்ளது. கொடைக்கானலில் செயல்பட்டு வந்த பாதரச தொழிற்சாலையில் வெளியேறிய ரசாயன கழிவு. அங்குள்ள ஏரியில் கலந்து உள்ளதால் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்து உள்ளதாக பல்வேறு சமூக அமைப்பினர் கூறி வருகின்றனர்.
மேலும் அந்த தொழிற்சாலை வழியாக பயணிக்கும் பாம்பாறு பெரியகுளம் வழியாக ஓடி பல்வேறு கண்மாய்களை நிரப்பி வராக நதியில் கலக்கிறது. இதனால் பாம்ப ஆற்றின் மூலம் நீர் நிரப்பும் பெரியகுளம் கண்மாய் தண்ணீரிலும் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் அளவில் பாதரசம் கலந்து இருப்பதாக ஐதராபாத் ஐஐடி மேற்கொண்ட ஆய்வு தெரிவித்துள்ளது.
இதனால் கொடைக்கானல் ஏரி, பெரியகுளம் கண்மாய்களில் பிடிக்கப்படும் மீன்களில் 30 முதல் 40 % வரை பாதரசம் கலந்து இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும், அந்த மீன்களை உண்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேனி, கோவை, திண்டுக்கல் ஆட்சியர்களுக்கும், கொடைக்கானல் நகராட்சி ஆணையருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பாதரசம் உயிரினங்களால் உட்கொள்ளப்படும் போது மெத்தைல் பாதரசமாக மாறும் எனவும் மெத்தைல் பாதரசம் நரம்பு மண்டலத்தை கடுமையாக பாதித்து மூளையை சேதப்படுத்துவதோடு சிறு நீரகத்தையும் செயல் இழக்க செய்துவிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.