ராமர் பாலம் பற்றி 6 வாரத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்
ராமர் பாலம் தொடர்பாக மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா, சுப்பிரமணியசாமி, இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்களில், சேது சமுத்திர திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், இத்திட்டத்தை மாற்று வழிப்பாதை மூலமாக நிறைவேற்ற வேண்டும் என்றும், 6–வது கடல் வழிப்பாதையில் உள்ள ராமர் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றும் கூறி இருந்தனர்.
இந்த மனுக்களின் மீது கடந்த 2005–ம் ஆண்டு முதல் விசாரணை நடைபெற்று வருகிறது..
இந்த நிலையில் இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி, தானே நேரில் ஆஜராகி வாதாடினார். அவர் தன்னுடைய வாதத்தின் போது, சுப்ரீம் கோர்ட்டு போதிய அவகாசம் அளித்தும் மத்திய அரசு இதுவரை ராமர் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிப்பது குறித்தும், மாற்றுப் பாதையில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவது குறித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள், ராமர் பாலம் பற்றிய தனது நிலைப்பாடு குறித்து மத்திய அரசு 6 வாரங்களுக்குள் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.