வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கத்தின் வயிற்றில் ஆண்குட்டி இறந்தது
சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, கரடி, யானை, மான் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளும் பறவைகளும் உள்ளது. இவைகளை பார்வையிட தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.பூங்காவில் உள்ள ஒரு பெண் சிங்கத்தின் வயிற்றில் இருந்த ஆண் சிங்க குட்டி இறந்து பிறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து பூங்கா ஊழியர்கள் கூறுகையில், ‘’ இங்குள்ள குகையில் 15 சிங்கங்கள் உள்ளன. 9 வயது சிவா என்ற ஆண் சிங்கமும் 6 வயது மாலா என்ற பெண் சிங்கமும் சேர்ந்ததால் அந்த சிங்கம் கர்ப்பமானது. நிறைமாத கர்ப்பமாக இருந்த சிங்கத்துக்கு பூங்கா மருத்துவமனை டாக்டர்கள் நேற்று பிரசவம் பார்த்தனர்.
பெண் சிங்கத்தின் வயிற்றில் இருந்த ஆண் சிங்க குட்டி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்’ என்றனர். ஆனால் இதுகுறித்து பூங்கா நிர்வாகத்திடம் கேட்டதற்கு பதில் கூற மறுத்துவிட்டனர்.சிங்க குட்டி இறந்த நிலையில்தான் பிறந்ததா, பிறந்ததும் குட்டியை பெண் சிங்கம் காலால் மிதித்து கொன்றுவிட்டதா என்று அங்குள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.