Breaking News
உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு 60 ஆண்டுகளுக்கு பிறகு இத்தாலி அணி தகுதி பெறவில்லை

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2018) ரஷியாவில் ஜூன் 14-ந் தேதி முதல் ஜூலை 15-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் 32 அணிகள் பங்கேற்கும். போட்டியை நடத்தும் ரஷியா தவிர எஞ்சிய 31 அணிகளும் தகுதி சுற்று போட்டிகள் மூலமே தான் நுழைய முடியும்.

உலக கோப்பை தகுதி சுற்று போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இந்த நிலையில் இத்தாலியின் மிலன் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த ‘பிளே-ஆப்’ சுற்று 2-வது ஆட்டத்தில் இத்தாலி-சுவீடன் அணிகள் மோதின.

4 முறை சாம்பியனான இத்தாலி அணி வெற்றி பெற்றால் தான் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற நெருக்கடியுடன் சொந்த மண்ணில் களம் கண்டது. உள்ளூரில் ஆட்டம் நடப்பதால் இத்தாலி அணி வெற்றி பெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சுவீடன் அணி டிரா செய்தாலே உலக கோப்பை போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலையுடன் களம் இறங்கியது.

ஆட்டம் தொடக்கம் முதலே இத்தாலி அணி தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தது. சுவீடன் அணியினர் தடுப்பு ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்தினார்கள். இத்தாலி அணியின் கட்டுப்பாட்டில் பந்து அதிக நேரம் வலம் வந்தாலும், கடைசி வரை சுவீடன் அணியின் தடுப்பு ஆட்ட அரணை தகர்த்து இத்தாலி அணியினரால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. விறுவிறுப்பான இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது.

பிளே-ஆப் சுற்றில் முதல் ஆட்டத்தில் இத்தாலி அணி 0-1 என்ற கோல் கணக்கில் சுவீடனிடம் தோல்வி கண்டு இருந்ததால் அந்த அணி அடுத்த ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை அதிர்ச்சிகரமாக இழந்தது. 1958-ம் ஆண்டுக்கு பிறகு இத்தாலி அணி உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறாமல் போனது இதுவே முதல்முறையாகும். 60 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பை போட்டியில் விளையாடும் வாய்ப்பை பறிகொடுத்து இருக்கும் இத்தாலி அணி உலக கோப்பை போட்டிக்கு அதிக தடவை (18 முறை) தகுதி பெற்ற அணிகள் வரிசையில் 3-வது இடத்தில் உள்ளது. பிரேசில் அணி எல்லா போட்டிகளுக்கும் தகுதி பெற்று முதலிடத்திலும், ஜெர்மனி அணி 19 முறை தகுதி கண்டு 2-வது இடத்திலும் உள்ளன.

இத்தாலி அணி 4 முறை (1934, 1938, 1982, 2006) உலக கோப்பையை உச்சி முகர்ந்து இருக்கிறது. இரண்டு முறை (1970, 1994) 2-வது இடத்தை பிடித்து இருக்கிறது. ஐரோப்பிய கண்டத்தில் நெதர்லாந்துக்கு அடுத்தபடியாக வலுவான இத்தாலி அணி தகுதி இழந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தாலி அணி உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறாமல் போனதால் அந்த நாட்டு வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் சோகத்தில் மூழ்கி இருக்கிறார்கள். இதற்காக இத்தாலி கால்பந்து சம்மேளனம் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.

இத்தாலி அணியுடன் டிரா கண்டதால் சுவீடன் அணி உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றது. அந்த அணி 2006-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது. சுவீடன் அணி ஒட்டுமொத்தத்தில் 12-வது முறையாக உலக கோப்பை போட்டியில் களம் காணுகிறது. இதுவரை 29 நாடுகள் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இன்னும் 3 அணிகள் மட்டுமே தகுதி பெற வேண்டி உள்ளது. அந்த 3 அணிகள் எவை? என்பது இன்று நடைபெறும் பிளே-ஆப் சுற்று ஆட்டங்கள் முடிவில் தெரிந்து விடும்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.